ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள பாலகொலா ஊராட்சிக்குட்பட்டது மைனலை மட்டம், கிட்டட்டி, தேனாடு மற்றும் மனைலை ஆகிய கிராமங்கள். இப்பகுதிகளுக்கு ஊட்டி- மஞ்சூர் சாலை சந்திப்பில் இருந்து கிட்டட்டி வரை ஒரு சாலை செல்கிறது. இச்சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, இச்சாலையை சீரமைக்க ஊட்டி ஊராட்சி ஒன்றியம் நிதி ஒதுக்கியது. ஆனால், கடந்த சில மாதங்களாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல், தள்ளிப்போட்டுக் கொண்டே சென்றது. இதனை தொடர்ந்து, இச்சாலையை சீரமைக்க வலியுறத்தி தேனாடு பகுதி கவுன்சிலர் ராஜேஷ்வரி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் ஏற்படாத நிலையில், சாலையில் உள்ள பள்ளங்களில் கப்பல் விடும் நூதன போராட்டத்தை மேற்கொண்டார். பின்னர் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சாலையை உடனடியாக சீரமைக்கப் போவதாக அறிவித்ததோடு தற்போது அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் உள்ள பெரிய பள்ளங்களை மூடும் பணிகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. விரைவில் தார் சாலை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு போராட்டங்களுக்கு பின் இச்சாலை சீரமைக்கப்படும் நிலையில், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்….
The post மைனலை மட்டம் -கிட்டட்டி சாலை சீரமைக்கும் பணி துவக்கம்: மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.