×

ரூ.13,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு லண்டனில் நீரவ் மோடி கைது

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஸ்விப்ட் முறையில் பணத்தை  பரிமாற்றம் செய்து ரூ.13,500 மோசடி செய்த வழக்கில் லண்டனில் தலைமறைவாக இருந்த  பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி நேற்று கைது செய்யப்பட்டார். மும்பை வைர  வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்ஷி ஆகியோர் பஞ்சாப் நேஷனல்  வங்கி மூலம் ரூ.13,500 கோடி மோசடி செய்தனர். தொழிலதிபர் விஜய் மல்லையாவை  போல், இவர்களும் குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேறினர். நீரவ் மோடி மீது  சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் நிதி மோசடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு  செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தன.  இவரது வங்கி கணக்குகளும்  முடக்கப்பட்டன. இவரை கைது செய்வதற்கு சர்வதேச போலீசிடம் வேண்டுகோள்  விடுக்கப்பட்டது. இந்த மோசடி நாடு முழுவதும் பெரும் அதிர்வ லைகளை  ஏற்படுத்தியது. இதற்கு உடந்தையாக இருந்த வங்கி ஊழியர்கள் உட்பட பலரிடம்  விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, நீரவ் மோடி எங்கிருக்கிறார் என  உறுதியாக தெரியாத நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சுதந்திரமாக  சுற்றித்திரியும் வீடியோ ஆதாரங்கள் வெளியாகின.

இவர் லண்டனின் மேற்கு  பகுதியில் சென்டர் பாய்ன்ட் டவர் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி  குடியிருப்பில் வசிக்கிறார். 3 படுக்கை அறை கொண்ட இவரது வீட்டுக்கு மாத  வாடகை ரூ.15 லட்சம். இவரை இங்கிலாந்தின் ‘டெலிகிராப்’ பத்திரிகை நிருபர்  அடையாளம் கண்டு அவரிடம், சில கேள்விகள் கேட்டார். இங்கிலாந்து அரசிடம் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளீர்களா எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு  நீரவ் மோடி பதிலளிக்கவில்லை.   இந்நிலையில், நீரவ் மோடியை கைது  செய்வதற்கான வாரண்டை லண்டன் நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்தது. இதை  தொடர்ந்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார். லண்டன் போலீசார் வெளியிட்ட  அறிக்கையில், இந்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க நீரவ் தீபக் மோடி,  (48), பிறந்த தேதி 24..02.1971, மார்ச் 19ம் தேதி ஹால்போர்னில் கைது  செய்யப்பட்டார்’ என  தெரிவித்துள்ளது.

நீரவ் மோடிக்கு எதிராக  ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என இந்திய அமலாக்கத்துறையினர்  வலியுறுத்தியதை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரெட் கார்னர் நோட்டீசை  லண்டன் பிறப்பித்தது. அதை தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் உள்துறை  அமைச்சகங்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு கைது  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி  வழக்கின் பிரதான குற்றவாளி நீரவ் மோடியின் மனைவி அமி மோடிக்கு எதிராக  ஜாமீனில் விட முடியாத பிடிவாரண்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் சில  நாட்களுக்கு முன்பு பிறப்பித்திருந்தது. அவர் இன்னும் கைது  செய்யப்படவில்லை. வங்கிக்கடன் மோசடியில் தேடப்படும் கிங்பிஷர் அதிபர்  விஜய் மல்லையாவும் லண்டனில் பதுங்கியுள்ளார். இவர் அமலாக்கத்துறை தொடர்  முயற்சியால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரை நாடுகடத்தும் முயற்சி  தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நீரவ் மோடி லண்டன்  வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.  அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும்  29ம் தேதி நடைபெறும். அதுவரை நீரவ் மோடி சிறையில் இருக்க வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது.

173 ஓவியங்கள், 11 சொகுசு கார்கள் ஏலம்
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நீரவ் மோடியின்  மனைவி அமிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை மும்பை சிறப்பு  நீதிமன்றம் சில தினங்கள் முன்பு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நீரவ்  மோடியிடம் இருந்து பறிமுதல் செய்த 173 ஓவியங்கள், ரோல்ஸ் ராய்ஸ், போர்சே,  பென்ஸ் உட்பட 11 ஆடம்பர கார்களை ஏலம் விடுவதற்கு மும்பை சிறப்பு  நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி வாங்கியுள்ளது.இவற்றின் மதிப்பு  சுமார் ரூ.5,772 கோடி. இதுதவிர மற்றொரு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 68  ஓவியங்களை ஏலம் விடவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும்,இந்த மாத  இறுதிக்குள் ஏல தேதி அறிவிக்கப்படும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : London , bank loan, fraud case, Nirav Modi, arrested, London
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...