×

அனுமதி இல்லாமல் வாகனங்களில் கட்சிக் கொடி கட்டி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அனுமதி இல்லாமல் கட்சிக் கொடி கட்டி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அனுமதி இல்லாமல் கட்சிக் கொடி கட்டி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வங்கிகளில் இருந்து பணம் எடுத்துச்செல்ல ரிசர்வ் பங்க் ஆப் இந்தியா என்ன விதிமுறைகளை தெரிவித்துள்ளதோ அதை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணம் எடுத்துச் செல்லும்போது, மாவட்ட தேர்தல் அதிகாரியின் அனுமதி கடிதம் வாங்கி வைத்திருந்தால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்ய மாட்டார்கள்.

ரூ.10 லட்சத்துக்கு மேல் நெட் ேபங்க் மூலம் பணம் அனுப்பினால் அதுபற்றிய தகவல்கள் உடனடியாக வருமான வரித்துறைக்கு போய்விடும். அதேபோன்று, இதுவரை பயன்படுத்தாக அக்கவுண்ட்டில் இருந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மொத்தமாக பணம் அனுப்புவதும் கண்காணிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பறக்கும் படையினர் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்சென்ற ரூ.12 கோடியே 80 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் ரூ.3.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கிருபாகரன் என்பவர் எடுத்துச் சென்ற 94 கிலோ தங்கம் கரூரில் பிடிபட்டுள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது. மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ.5.63 கோடியாகும். இதுதவிர மதுபாட்டில்கள், ஒரு கைதுப்பாக்கி, ஒரு இரட்டை குழாய் துப்பாக்கி, 1.8 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1.61 லட்சம் அரசு கட்டிடங்களில் எழுதப்பட்டிருந்த தேர்தல் விளம்பரம், 1.28 லட்சம் தனியார் கட்டிடங்களில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் சுவரொட்டி எழுதியதாக 336 வழக்குகளும், அனுமதியில்லாமல் பணம் எடுத்து சென்றதால் 210 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனுமதி பெற்று வைத்திருந்த 18,379 துப்பாக்கிகள் தேர்தலையொட்டி அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முன் எச்சரிக்கையாக 3,166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்காக 3.45 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வருகிற 24ம் தேதி முதல்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

2வது, 3வது கட்ட பயிற்சிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழகத்தில் வந்துள்ள தேர்தல் செலவின பார்வையார்கள் நேற்று முதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களை இவர்கள் நேரடியாக டெல்லிக்கு அனுப்பி வைப்பார்கள். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட அனைவரையும் கண்காணிக்கதான் பார்வையாளர்கள் வந்துள்ளனர். சி-விஜில் அப் மூலம் இதுவரை 470 புகார்கள் வந்துள்ளன. இதில் 154 புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 119 புகார்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Electoral Officer , vehicles, Party flag, Chief Electoral Officer
× RELATED தேசிய சராசரியைவிட தமிழகத்தில்...