×

ரயில் புறப்பட 4 மணி நேரம் முன்பு ரயில் ஏறும் இடத்தை மாற்றலாம் : இந்திய ரயில்வே அறிவிப்பு

டெல்லி : ரயில் பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், விரைவு ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் ரயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன்பு ஏறும் இடத்தை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
அதாவது ரயிலில் சார்ட் தயாரிப்பதற்கு முன்பே தாங்கள் ரயிலில் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தித்தர முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வசதி தத்கல் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

சில தவிர்க்க முடியாத தருணங்களில் பயணிகள் தாங்கள் புறப்பட வேண்டிய ரயில் நிலையத்தில் ரயிலை பிடிக்க முடியாமல் போகும் போது இந்த வசதி அவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பு 139 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்களது ரயில் எண் மற்றும் மாற்ற வேண்டிய ரயில் நிலையத்தின் தகவல்களை அளிக்க வேண்டும். ஒருவேளை மாற்றிய ரயில் நிலையத்தில் இல்லாமல், அவர் முன்பு பதிவு செய்த ரயில் நிலையத்தில் இருந்தும் எந்தக் கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம் என்றும், அவரது இருக்கை வேறு யாருக்கும் மாற்றி வழங்கப்படாது என்றும் ரயில்வே நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

மே 1ம் தேதிக்குள் இந்த புதிய வசதி நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் ஐஆர்சிடிசி இணையதளத்தை மாற்றி அமைக்குமாறு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பயணிகள் தான் ரயிலில் ஏறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ அல்லது ரயில் நிலையத்துக்கு நேரில் சென்று மாற்ற விரும்பும் ரயில் நிலையங்களின் பெயரை எழுதிக் கொடுத்துத்தான் மாற்ற முடியும் என நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த புதிய நடைமுறைக்கு ரயில் பயணிகளிடையே வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : departure ,Indian Railways , Railway Station, Indian Railways, Passenger
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...