×

தேர்தல் விதிமுறையால் ஜவுளிசந்தையில் விற்பனை மந்தம்

ஈரோடு: தேர்தல் விதிமுறையால் ஈரோடு ஜவுளிசந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. நேற்று நடந்த ஜவுளிசந்தையில் 20 சதவீதம் மட்டுமே ஜவுளிகள் விற்பனையானது. தமிழகத்தில் மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக பணம் கொண்டு செல்பவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வதால், ஜவுளி விற்பனை மந்தமாக நடந்து வருகிறது.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கனிமார்க்கெட் ஜவுளிசந்தை திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை இரவு வரை நடைபெறும். இந்த சந்தைக்கு ஜவுளிகளை கொள்முதல் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வந்து செல்வார்கள். மேலும் வாரம்தோறும் நடைபெறும் இந்த சந்தையில் சுமார் ரூ.3 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் இருக்கும். ஆனால் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு உள்ளதால் பணம் கொண்டு வர வியாபாரிகள் தயங்கி வருகின்றனர். இதனால் விற்பனை குறைந்துள்ளது. வழக்கமாக கோடைக்காலத்தில் காட்டன் துணிரகங்களின் விற்பனை அதிகரிக்கும். ஆனால் தேர்தல் விதிமுறைகள் உள்ளதால் வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது.

இதுகுறித்து கனிமார்க்கெட் வாரச்சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வியாபாரிகள் பணத்தை கொண்டு வர தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் வியாபாரிகளுக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது. வங்கியில் பணம் கட்டுவதற்காக சலானுடன் எடுத்து சென்றால் கூட பணத்தை பறிமுதல் செய்கிறார்கள். வணிகர்கள் என்பதற்கான ஆதாரத்தை காட்டினால் சோதனைக்கு பின்னர் அனுப்ப வேண்டும். குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும். இதில் இன்று (நேற்று) நடந்த சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. சில்லரை வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். வணிகர்களுக்கு உரிய விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election, rule, textile
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...