×

கொரோனா மீண்டும் பரவுவதால் பேளுக்குறிச்சி சந்தை மூடப்பட்டது: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

சேந்தமங்கலம் : கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக, நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற பேளுக்குறிச்சி மளிகை பொருட்கள் சந்தை, மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் மூடப்பட்டது. நாமக்கல் மாவட்டம்  சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சியில் மாரியம்மன் கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் புகழ்பெற்ற மளிகை பொருட்கள் சந்தை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் இறுதி வரை சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கடை போட்டு வியாபாரம் செய்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மளிகை பொருட்களை மொத்தமாக வாங்க பெண்கள், உணவகங்கள் நடத்துபவர்கள் மற்றும் பொதுமக்கள்  பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கூட்டமாக வந்து செல்வது வழக்கம். மளிகை பொருட்கள் செட் கணக்கில் விற்கப்படுவதால், அதனை வாங்க பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். வாரத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி. சனிக்கிழமை மதியம் வரை சந்தை நடைபெறும். இரவு முழுவதும் சந்தையில் வியாபாரம் நடைபெறும். கடந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய சந்தை, தொடர்ந்து 4 வாரங்கள் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 2வது அலையாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சந்தை கூடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி  ஊராட்சி நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் வெளிமாவட்டங்களில் இருந்து அதிகமானோர் பொருட்களை வாங்க கூடுவதால் தொற்று அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சந்தையை மூடியதுடன், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது என அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இதனால் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்….

The post கொரோனா மீண்டும் பரவுவதால் பேளுக்குறிச்சி சந்தை மூடப்பட்டது: மாவட்ட நிர்வாகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bellukkurichi Market ,Corona ,District Administration ,Chendamangalam ,Namakkal ,Dinakaran ,
× RELATED காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி...