×

பிஇ, பிடெக் படிப்பில் சேர என்ன மதிப்பெண் வேண்டும்? ஓசி பிரிவினர் 45% மதிப்பெண்

* பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40%
* திடீர் அரசாணை வெளியீடு


சென்னை: பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தேர்ச்சி சதவீதத்தில் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, இதர பிரிவினர் 45 சதவீத தேர்ச்சியும், மற்றவர்கள் 40 சதவீத தேர்ச்சியும் பெற்றிருந்தால் பிஇ, பிடெக் படிப்புக்கு தகுதியாவார்கள். பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு பிளஸ் 2 வகுப்பில் கணக்கு, இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் சேர்க்கை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுவரை பிளஸ் 2 வகுப்பில் ஒரு பாடத்துக்கு தலா 200 மதிப்பெண் என மொத்த மதிப்பெண் 1200 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு முதல், ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என மொத்தம் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் தான் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

இதுஒருபுறம் இருக்க, கடந்த ஆண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 2 லட்சம் இடங்கள் வரை ஒதுக்கப்பட்டு இருந்தும், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையில் மாறுபாடு, தரமான கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போனது என மாணவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக ஒரு லட்சம் இடங்கள் காலி ஏற்பட்டது.  இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூலை மாதம் தொடங்க உள்ளது. பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் அண்ணா பல்கலைக் கழகம்தான் நடத்தி வந்தது. ஆனால், கவுன்சலிங் நடத்தும் குழுவின் பொறுப்பில் இருந்து அண்ணா பல்கலைக் கழகம் துணை வேந்தர் நீக்கப்பட்டு, பார்வையாளராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, மாணவர் சேர்க்கை கவுன்சலிங்கை அண்ணா பல்கலைக் கழகம் நடத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு பதிலாக தொழில் நுட்பக் கல்வி கழகம் கவுன்சலிங் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான குறைந்தபட்ச தேர்ச்சி சதவீதத்தில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறையின் முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2010ம் ஆண்டு உயர்கல்வித்துறையின் அரசாணை 151ன்படி, பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, பொறியியல் படிப்புக்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் பிளஸ் 2 பாடங்களில் ஓசி பிரிவினர் குறைந்தபட்சம் சராசரியாக 50 சதவீதமும், பிசி,பிசிஎம் பிரிவினர் சராசரியாக 45 சதவீதமும், எம்பிசி பிரிவினர் சராசரியாக 40 சதவீதமும், எசிஏ, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், கடந்த 3.1.19ம் தேதி, தொழில் நுட்பக் கல்விக் கழக ஆணையர் அரசுக்கு ஒரு கருத்துரு கடிதம் அனுப்பினார்.

அதில், நடப்பு 2019-2020ம் கல்வி ஆண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான குறைந்த பட்ச மதிப்பெண்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அதில் 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை மேற்கண்ட மாணவர் சேர்க்கை தொடர்பாக நடந்த வழக்குகள், மேல் முறையீடுகள், அகில இந்திய தொழில் நுட்ப கழகம்(ஏஐசிடிஇ) ஆகியவற்றின் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமாக தெரிவித்து இருந்தார். தொழில் நுட்ப கல்வி கழக ஆணையரின் கருத்துருவை கவனமுடன் அரசு பரிசீலித்தது. இதையடுத்து, நடப்பு 2019-2020ம் கல்வி ஆண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான குறைந்த பட்சமாக பிளஸ் 2 வகுப்பில் ஓசி பிரிவினர் 45 சதவீதமும், பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயித்து  உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டுக்கான பிஇ, பிடெக் படிப்புக்கான மாணவர் சேர்க்கை மேற்கண்ட மதிப்பெண்கள் அடிப்படையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BTech ,division ,OC , BE, BTech, score, os
× RELATED உள்ளூர் பார்க்கிங் தளங்களை...