தொடக்க வீரராக களமிறங்குவேன்...: ரோகித் ஷர்மா உறுதி

மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரோகித், இது குறித்து கூறியதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் நான் தொடக்க வீரராகக் களமிறங்க முடிவு செய்துள்ளேன். அதில் மிக உறுதியாக  உள்ளேன். உலக கோப்பை தொடர் நெருங்கி விட்டது என்பதுடன், இந்திய அணியிலும் தொடக்க வீரராகவே விளையாடி வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். முன் வரிசை வீரராக விளையாடும்போது தான் அதிக ரன்  குவித்திருக்கிறேன் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அணி நிர்வாகமும் இதை நன்கு உணர்ந்துள்ளது. நடு வரிசையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது, இந்த முடிவை எளிதாக்கிவிட்டது.

இந்திய அணி வீரர்கள் உலக கோப்பை வரை தொடர்ச்சியாக அடுத்த சில மாதங்களுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது உண்மையிலேயே சவாலானது தான். ஆனால், கடந்த சில  ஆண்டுகளாகவே அடுத்தடுத்த தொடர்களில் விளையாடிய அனுபவம் உள்ளதால், இதை எளிதாக சமாளிக்க முடியும் என நம்புகிறேன். உடல்தகுதியை பராமரிப்பது மற்றும் பணிச்சுமையை கையாள்வது என்பது ஒவ்வொரு வீரருக்கும் வேறுபடும். ஓய்வு தேவைப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட வீரர் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : batsman ,Rohit Sharma , opening batsman, Rohit Sharma, confirmed
× RELATED ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரராக...