×

மதுரை வாகன சோதனையில் ரூ.3.87 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்

மதுரை: மதுரையில் நேற்று நடந்த வாகன சோதனையில் ரூ.3.87 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை, மேலூர் ரோட்டில் உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நேற்று காலை  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன  சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணத்திலிருந்து மதுரை வந்த தனியார் கொரியர் ஜீப்பை நிறுத்தி, அதிகாரிகள் சோதனையிட்டனர். ஜீப்பில் 12 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள், நான்கரை கிலோ வெள்ளி  பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.3.87 கோடி.  அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தங்கம் மற்றும் வைர நகைகள்  கும்பகோணத்தில் இருந்து, சென்னைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிந்தது. விசாரணையில், மதுரையில் உள்ள கிளை நகைக்கடைக்கு கொண்டு சென்று, அங்கு சரிபார்க்கப்பட்டு,  விற்பனைக்காக சென்னையில் உள்ள கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். உரிய ஆவணம் இல்லாததால், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

கரூர் அருகே 95 கிலோ நகைகள் சிக்கியது: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி சுங்கசாவடியில் நேற்றுமுன்தினம் இரவு பறக்கும்படை அலுவலர் குழந்தைவேலு தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12.45 மணியளவில் அவ்வழியாக மதுரையில் இருந்து துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டியினருடன் வந்த கொரியர் ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 94 கிலோ 899 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.5.6 கோடியாகும். மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள நகைக்கடைக்கு நகைகளை எடுத்து செல்லப்பட்ட அந்த நகைகளை  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் மதுரையில் தனியார் ஏடிஎம்களில் வைக்க எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.35 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆம்னி பஸ்சில் ரூ.34 லட்சம் பறிமுதல்
நாகர்கோவிலில் தனியார் ஆம்னி பஸ்சில் நடந்த சோதனையில்  ராமநாதபுரத்தை சேர்ந்த  முகமது அபுல்தீன் (32) என்பவரின் பையில் ரூ.34 லட்சத்து 8 ஆயிரம் இருந்தது. மதுரையில் ஒருவர் பணம் கொடுத்ததாகவும், நாகர்கோவில் பஸ் நிலையத்தில் இறங்கியதும் ஒரு நபர் போன் செய்து பணத்தை பெற்றுக் கொள்வார் என்றும் தெரிவித்தனர். அதன்படி நான் பணத்தை கொண்டு வந்தேன் என்று முகமது அபுல்தீன் தெரிவித்தார். இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அது ஹவாலா பணமாக இருக்கும் என்ற சந்தேகிப்பதாக அதிாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai, vehicle testing, gold, diamond jewellery
× RELATED மேம்பால பணி காரணமாக தியாகராயர் நகரில் போக்குவரத்து மாற்றம்