×

முதல்வர், துணை முதல்வருடன் திடீர் சந்திப்பு நடிகர் கார்த்திக் அதிமுகவில் இணைந்தாரா?

சென்னை: நடிகர் கார்த்திக் அதிமுக தலைமை அலுவலகம் வந்து முதல்வர், துணை முதல்வரை சந்தித்தார். பின்னர் அவர் கூறும்போது, நான் அதிமுகவில் இணைந்துவிட்டதாகவும் வச்சிக்கலாம் என்று கூறி குழப்பம் ஏற்படுத்தினார். நடிகர் கார்த்திக் நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்தார். பின்னர் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் கடம்பூர் ராஜு எனக்கு ரொம்ப வருஷமாக பழக்கம். அவர்தான் என்னை இங்கு அழைத்து வந்தார். 1996ம் ஆண்டு அதிமுக அலுவலகத்துக்கு வந்தேன். அதற்கு பிறகு இன்றுதான் வருகிறேன். முதல்வரையும், துணை முதல்வரையும் சந்தித்ததில் சந்தோஷம். இங்கே இணையும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

இதுகுறித்து விரிவாக 2 நாளில் சொல்றேன். இப்போது சுருக்கமாக சொல்றேன். நிறைய பேர் ஏன் அதிமுகவுக்கு ஆதரவு மட்டும் தருகிறீர்கள் என்று கேட்டனர். ஏன் என்றும் பிறகு சொல்றேன். அதிமுகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் நடிகர் கார்த்திக்கிடம், `நீங்கள் அதிமுகவில் இணைந்துவிட்டீர்களா அல்லது தனியாக கட்சி எதுவும் நடத்தப்போகிறீர்களா’ என்று கேட்டபோது, “கிட்டத்தட்ட அந்தமாதிரிதான் என்று வச்சுக்குங்களேன். நீங்கள் அப்படியும் வச்சுக்கலாம்... இல்ல பிரசாரம் பண்ண போறேன் என்றும் வச்சிக்கலாம். உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். பிரசாரம் செய்கிறேன், அவ்வளவுதான்” என்றார். அவரது தெளிவு இல்லாத பதிலால் பத்திரிகையாளர்கள் குழப்பம் அடைந்தனர். நடிகர் கார்த்திக் ஏற்கனவே முதல்வரை அவரது வீட்டில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Deputy Chief Minister ,Karthik ,meeting , Chief Minister, Deputy Chief Minister, Actor Karthik, DMK
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு