×

கொள்ளிடம் அருகே எருக்கூரில் 10 ஆண்டாக மின்வசதியின்றி தவிக்கும் குடியிருப்புகள்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே 10 வருடமாக மின்வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் இல்லாத குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் ஊராட்சியில் கணேசன் நகர் உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவகளுக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஏழு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு குடிசை வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இலவச மனைப் பட்டா அரசின் சார்பில் வழங்கப்பட்டும் அடிப்படை வசதிகள் செய்து தராததால் மற்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் இங்கு வீடு கட்டிக் கொள்ள முன்வரவில்லை. ஆனால் எருக்கூரை சுற்றியுள்ள பகுதியில் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த கணேசன் நகர் முழுக்க முழுக்க அரசின் இலவச மனைப் பட்டா கொண்ட நகரமாகும்.

மின்வசதி, குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி இங்குள்ளவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் வசதி இதுவரை செய்து கொடுக்கவில்லை. ஒரு கைபம்பு கூட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் அமைத்து தரப்படவில்லை. இதனால் குடிநீருக்கு அதிகம் சிரமப் படுகின்றனர். இது வரை மின்சார வசதி செய்து தரப்படவில்லை. எருக்கூரிலேயே மற்ற கிராமங்களுக்கு மின் வசதி தரும் மின்பகிர்மான நிலையம் இருந்தும் அங்குள்ள கணேசன் நகருக்கு மின்சாரம் இதுவரை வழங்க வில்லை. இது குறித்து பொதுமக்கள் சார்பில் வேலு என்பவர் கூறுகையில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகி பி.டி.ஓ விடம் பலமுறை தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நகருக்கு மின்வசதி செய்து தர 5 மின்கம்பங்கள் புதைக்க வேண்டும் அதற்கு  ரூ,2 லட்சம் மின்வாரியத்திற்கு கட்ட வேண்டும்  என்ற விதியுள்ளது. இந்த தொகை ஊராட்சி நிர்வாகம் தான் செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கையை ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் சார்பிலும் மேற்கொள்ளப்படவில்லை. இங்கு வசிப்பவர்கள் 100  நாள் வேலை திட்டத்தில் கிடைக்கும் வேலையை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இங்குள்ள குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மண் எண்ணையை பயன்படுத்தி தான் இரவு நேரங்களில் பாடப்புத்தகங்களைப் படித்து வருகின்றனர்.  குடும்ப அட்டைதாரர்களுக்கான ஒரு லிட்டர் மண்ணெண்ணை மட்டுமே  மாதத்திற்கு ஒரு முறை கிடைக்கிறது.

மீதமுள்ள நாட்களில் டீசலை வாங்கி விளக்கு எரித்து வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது கணேசன் நகரில் 30 வாக்காளர்கள் உள்ளனர். அரசின் சார்பில் 3 ஏக்கர் பரப்பளவில் ஏழைகளுக்கென்று இலவசமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த கணேசன் நகருக்கு உடனடியாக மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இங்கு வசித்து வரும் கனகா, பாலச்சந்திரன், விஜய் ஆகியோர் கூறுகையில், எங்களுக்கு அரசு இலவச மனைப்பட்டா கொடுத்தும் அடிப்படை வசதியின்றி இருளில் வசித்து வருகின்றோம். அடிப்படை வசதிகள் செய்து தராமல் இருப்பதால் மற்ற குடும்பத்தினர் இங்கு குடியேற முடியாமல் வெளியில் வாடகை வீடுகளில் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே அரசு அடிப்படை வசதிகள் செய்து தர உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tenants ,area ,Erukulla ,Kollidam , kollidam, erukkur, Apartments
× RELATED வீட்டு வாடகையை அரசே ஏற்க கலெக்டரிடம் மனு