×

திருமயம் அருகே கல்குவாரிகளால் நீர்வரத்து வாரிகள் அடைப்பு : குடிநீருக்கே கையேந்தும் அவலம்

திருமயம்: திருமயம் அருகே கல்குவாரி உரிமையாளர்களால் நீர்வரத்து வாரிகள் அடைபட்டு நீர் ஆதாரங்கள் வறண்டு போவதால் நாளடைவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், இலுப்பூர், அன்னவாசல், பொன்னமராவதி உள்ளிட்ட பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் ஒரு காலத்தில் விவசாயத்தையே நம்பி இருந்தனர். அதே சமயம் அப்பகுதியில் தலையடிகள் அதிகம் இருந்ததால் அப்பகுதியில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஜல்லி கல், முண்டு கல் உள்ளிட்டவைகள் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் காலப்போக்கில் பருவ மழையின் அளவு குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனிடையே கட்டங்கள் கட்ட, சாலைகள் அமைக்க பறையில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் மவுசு அதிகமானது.

இதனை பயன்படுத்தி கொண்ட அரசியல் பிரமுகர்கள் பறைகள் உள்ள விளைநிலங்கள், கொல்லைகாடுகள் விலை கொடுத்து வாங்கி அதிலிருந்த பாறைகளை வெட்டி எடுத்தனர். இதன் மூலம் நல்ல வருமாணம் கிடைத்த நிலையில் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கும் அதிகளவு பறைகள் ஜல்லிகளாக லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது விளைநிலங்களை பாதிப்பதோடு நின்றுவிடாமல் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பிரச்னை ஏற்படுத்துவதோடு அளவுக்கு அதிகமாக பாறைகள் வெட்டி எடுக்கப்படுவதாக மனதுக்குள்மக்கள் குமுறுகின்றனர். இதில் ஒரு சில கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வேதனை அடைவது ஒரு பக்கம் இருக்க, இது பற்றி புகார் செய்யவே கிராம மக்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில் அப்பகுதி கிராம மக்கள் கிரானைட் கிரசர்களை மூட வலியுறுத்தி அவ்வப்போது சாலை மறியல் செய்து வருகின்றனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு மக்கள் மனுக்கள் அளித்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது. இரவு பகலாக காதை பிளக்கும் வெடி சத்தம்: திருமயம் அருகே உள்ள சந்தனவிடுதி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் சுமார் 5க்கும் மேற்பட்ட மலையடிகள் இரவு பகல் பாராமல் 24மணி நேரமும் இயங்கி வருகிறது. மலையடியில் பாறைகள் வெட்டி எடுப்பதற்காக வெடி வைக்கப்படுறது. அவ்வாறு வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படும் போது வீடுகள், அதிர்வதோடு அதிகளவு சத்தம் காதை பிளக்கிறது. மேலும் வெடித்த பின்னர் பாறையில் இருந்து வரும் தூசுகள் காற்றில் பறந்து ஊர் முழுவதும் பரவி மக்களுக்கு சுவாச கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அதே படிக்கும மாணவர்கள், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கண்மாய், நீர்வரத்து வாரிகள் அழிப்பு: சந்தனவிடுதி கிராமத்தில் சந்தணகண்மாய், கம்பளம், கூத்தூரணி கண்மாய், இலுப்பைகுண்டு கண்மாய் உள்ளிட்ட முக்கிய கண்மாய்கள் உள்ளன. இக்காண்மாயில் உள்ள நீரை கொண்டே விவசாயம், குடிநீர் தேவைகளை அப்பகுதி மக்கள் பூர்த்தி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் அதிகளவு கிரஷர்கள் வந்ததால் லாரிகள்களின் வரவு அதிகரித்தது. இதனால் மேலே குறிப்பிட்ட கண்மாய்கள் மற்றும் நீர்வரத்து வாரிகளை லாரிகள் வழிதடமாக பயன்படுத்தி வருகின்றன. மேலும் தஞ்சாவூர்மதுரை சாலையில் உள்ள சந்தன கண்மாய் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதனால் சந்தன கண்மாய்க்கு நீர் வரும் வரத்து வாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கண்மாய்க்கு நீர் வரத்து குறைத்து விவசாயம் பாதிக்கப்பட்டு குடிநீருக்கே கையேந்தும் நிலை வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தவித்துள்ளனர்.

பெரும்பாலும் அப்பகுதியில் உள்ள மலையடிகள் கிராம குடியிறுப்பு பகுதியில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ளன. இந்நிலையில் மலையடிகள் எண்ணிக்கை, பரபப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் அரசு அறிவித்த அளவைவிட அதிகளவு ஆழத்திற்கு பாறை கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுகிறது. சந்தனவிடுதிபகுதியில் உள்ள ஒரு எம்சாண்ட் தாயாரிக்கும் மணல் குவாரி வரையறையின்றி அரசு விதிமுறைகளை மீறி செயல்படுவதாக அப்பகுதி  மக்கள் தெரிவித்தனர். வரம்பு மீறும் குவாரிகள்: சந்தனவிடுதி பகுதி மக்கள் கடந்த வருடம் மார்ச் மாதம் அனுமதியின்றி, வரம்பு மீறி செயல்படும் கல்குவாரிகளை மூட நடவடிக்கை கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். மேலும் மதுரை உயர்நீதி மன்றமும் அப்பகுதியில் உள்ள குவாரிகளை மூட உத்தவிட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதன் மீதி அதிகாரிகள் இது வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கடந்த 14ம்தேதி புதுக்கோட்டைசாலையில் பட்டணம் கிராமம் அருகே சாலை மறியல் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிரஷர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சந்தனவிடுதி பகுதியில் இயங்கும் ஆர்ஆர் எம்சாண்ட் தயாரிக்கும் தனியார் கிரஷர்ல் இரவு பகலாக இயங்குவதால் அப்பகுதியில் கடுமையான சுற்றுசூழல் மாசடைந்து வருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சுவாச கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கிரஷருக்கு தேவையான நீரை ராட்சத அழ்துளை கிணறு  மூலம் நீர் எடுப்பதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து கொண்டே வருவதோடு அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இருந்து இரவு நேரங்களில் குவாரி உரிமையாளர்கள் நீரை திருடுகின்றனர். இதனை தடுத்த நிறுத்த அதிகாரிகள் தவறும் பட்சத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கைவிடுத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gulvaris ,Thirumayam , Tirumayam, quarries, water
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...