×

தயிர், நாட்டுவெல்லத்தை பயன்படுத்தி குப்பைகளை உரமாக மாற்றும் திட்டம் : நாமக்கல் நகராட்சியில் தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் நகராட்சியில், புளித்ததயிர், நாட்டுவெல்லத்தை பயன்படுத்தி புதிய முறையில்  குப்பைகளை உரமாக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகரில் சேகரமாகும் குப்பையை பயன்படுத்தி, மண்புழு உதவியுடன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மண்புழு இல்லாமல் புதிய முறையில் இயற்கை உரம் தயாரிக்க நகராட்சி முடிவு செய்து பணிகளை துவங்கியுள்ளது. புளித்த தயிர், நாட்டு வெல்லம், தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி, இஎம்சொலுயூஷன் என்ற பெயரில் மருந்து தயாரித்து அதன் மூலம் மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. நாமக்கல் நகராட்சி சுகாதார அலுவலர் சுகவனம், சுகாதார ஆய்வாளர்கள் உதயகுமார், செல்வராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று புதிய முறையில் மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சுகாதார அலுவலர் சுகவனம் கூறியது: 100 லிட்டர் தண்ணீர், 10 கிலோ நாட்டு வெல்லம், 4லிட்டர் புளித்த தயிர் ஆகியவற்றைக் கலந்து இந்த இஎம் சொலுயூஷன் தயாரிக்கப்படுகிறது. இது தயாராக 10 நாட்கள் ஆகும். அதன் பிறகு, திரவ வடிவில் உள்ள இந்த மருந்தை ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து, மக்கும் குப்பைகள் மீது தெளித்து மூடி வைத்து விட வேண்டும். 40 முதல் 60 நாட்களுக்கு பிறகு, அந்த குப்பைகள் விவசாயிகள் பயன்படுத்தும் அளவுக்கு இயற்கை உரமாக மாறிவிடும்.

நாமக்கல் நகராட்சியில் இதுபோன்று மக்கும் குப்பைகளை ஆங்காங்கே இயற்கை உரமாக மாற்ற, 4 இடங்களில் நுண்ணுயிர் உதவி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. மே மாதத்திற்கு பிறகு இந்த 4 மையங்களிலும், தொடர்ச்சியாக மக்கும் குப்பைகள் இயற்கை உரமாக புதிய முறையில் மாற்றப்படும். இதன் மூலம் நகரின் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள், கொசவம்பட்டியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படாமல், நுண்ணுயிர் குடில் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இயற்கை உரமாக  மாற்றப்படும். இதன் மூலம் கொசவம்பட்டி குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை விரைவில் அகற்ற முடியும். இவ்வாறு சுகாதார அலுவலர் சுகவனம் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : municipality ,Namakkal , Curd, fertilizer, Namakkal
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...