×

அய்யர்மலை ரத்தின கிரீஸ்வரர் கோயிலுக்கு 10 மைல் தூரம் நடந்து காவிரி நீர் சுமந்து சென்ற ராஜவம்சத்தினர்

குளித்தலை: அய்யர்மலை ரத்தின கிரீஸ்வரர் கோயிலுக்கு ராஜவம்சத்தினர் காவிரி ஆற்றில் இருந்து மைல் தூரம் நடந்து காவிரி நீர் சுமந்து வந்து தீர்த்தம் செலுத்தி வழிபாடு செய்தனர். கர்நாடக மாநிலம்  பெல்லாரி அருகே உள்ளது மங்களநாடு. இதன் மன்னராக இருந்தவர் ஆர்யராஜா. சிறந்த சிவபக்தர். இவரது பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான், இவரது மாணிக்க மணிமகுடத்தை காணாமல் போக செய்தார். மகுடம் இல்லாமல் மன்னர் கவலை அடைந்தார். அப்போது அவர் முன் தோன்றிய சிவபெருமான், ‘மன்னா கவலைப்படாதே. உன் மணிமகுடம் தென்நாட்டில் ரத்தினகிரி(கரூர் மாவட்டம் அய்யர்மலை) என்ற மலையில் ஒரு அந்தணரிடம் உள்ளது பெற்றுக்கொள்’ என்றார். மன்னர் பல தேசங்களை கடந்து பல சிவாலயங்களை தரிசித்து இறுதியாக ரத்தினகிரி  மலையை அடைந்தார். அவரை கண்டு அங்கிருந்த அந்தணர் ‘எப்படி மணிமகுடம் தேடி வந்தீரோ.

அதோ அங்கு தெரியும் காவிரி ஆற்றில் நீர் எடுத்து வந்து இந்த கொப்பரையை நிரப்பு. பிறகு தருகிறேன்’ என்று ஒரு பெரிய கொப்பரையை காட்டினார். மன்னரும் சேனையுடன் ஆற்றில் நீர் எடுத்து வந்து கொப்பரையை நிரப்ப முயன்றார். எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் கொப்பரை நிரம்பாதது கண்டு, அரசர் அந்தணரிடம், ‘ஏன் என்னை சோதிக்கிறீர்கள்?’ என கோபத்துடன் கேட்டார். அதற்கு அந்தணரோ, ‘காவிரி நீரை நிரப்பாமல் என்னால் மகுடத்தை தர இயலாது’ என்றார். மேலும் கோபம் அடைந்த அரசர் உடைவாளை எடுத்து அந்தணர் மீது வீசினார்..

ஆனால் அது அந்தணரின் தலையில் மட்டும் பட்டது. அதே சமயம் அந்தணர் லிங்கத்தில் மறைந்தார். இது ஈசனின் திருவிளையாடல் என்று எண்ணி தனது தவறை உணர்ந்த மன்னன் உடைவாளால் தன்னை மாய்த்து கொள்ள முற்பட்டார். ஆனால் இறைவன் திருவிளையாடலால் வாளும் மறைந்தது. அங்குள்ள இறைவனின் திருநாமம் வாள்போக்கி நாதர் எனப்பட்டது. ஆர்யராஜா இங்கு வழிப்பட்டதால் இது ராஜலிங்கம் எனவும் பெயர் பெற்றது. ஆர்யராஜாவை ஆட்கொண்ட இறைவன் தன் வலச்சுற்றில் அவருக்கு இடமளித்து, உன்னைப் போலவே உனது பரம்பரையும் எனக்கு தீர்த்தம் செலுத்தினால் மகிழ்வேன் என்றார். அன்று முதல் ஆர்யராஜா பரம்பரையினர் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலுக்கு  கடம்பன்துறை காவிரி ஆற்றிலிருந்து 10 மைல் தூரம் நீர் சுமந்து நடந்தே வந்து இறைவனுக்கு தீர்த்தம் செலுத்தி வணங்கி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cousins ,Ayyarmalai Rama Greeswarar Temple , Ayyarmalai, Gemini Geevar Temple, Cauvery Water
× RELATED 95 வயது மூதாட்டி எரித்துக் கொலை