×

மதுரை தொகுதி ராஜன் செல்லப்பா மகனுக்கு கொடுத்ததன் எதிரொலி அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் நேரடி மோதல்: ராஜினாமா மிரட்டலால் முதல்வர் பணிந்தார்

சென்னை: மதுரை மக்களவை தொகுதியை ராஜன் செல்லப்பா மகனுக்கு கொடுத்ததன் எதிரொலியாக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் நேரடியாக மோதிக் கொண்டனர். அமைச்சரின் ராஜினாமா  மிரட்டலால் ஒரே நாளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணிந்து மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தார்.அதிமுக சார்பில் 20 மக்களவை தொகுதிகள், 20 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை  நடந்தது. இதில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யனுக்கு மதுரை மக்களவை தொகுதியை ஒதுக்க வேண்டும் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தினார். இதற்கு அதே மாவட்டத்தில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும்  எதிர்ப்பு தெரிவித்தார். தனது ஆதரவாளரும், மதுரையில் தற்போது எம்பியாக உள்ள ஆர்.கோபாலகிருஷ்ணனுக்கு மீண்டும் சீட் வழங்க வேண்டும் என்று அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார்.இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதிக்கொண்டனர். முதல்வர், துணை  முதல்வர் இருக்கும் போதே இந்த மோதல் நடந்தது. இதனால் அதிமுக அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு பேரையும் சமாதானப்படுத்த முதல்வர், துணை முதல்வர் முயன்றனர். தொடர்ந்து ராஜன் செல்லப்பா  மகன் ராஜ் சத்யனுக்கு மதுரை மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே அமைச்சர் செல்லூர் ராஜு அமைதியானார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை சமாதானப்படுத்தும் வகையில் அவருக்கு மாவட்ட செயலாளர்  பதவி வழங்கப்பட்டது. அதாவது ஏற்கனவே கட்சி ரீதியாக மதுரை மாநகர், மதுரை புறநகர் என 2 ஆக செயல்பட்டு வந்த மாவட்டங்கள் அமைச்சர் உதயகுமாருக்காக பிரிக்கப்பட்டு 3 மாவட்டங்களாக ஆக்கப்பட்டன. அதில்  அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

3 மாவட்டமாக பிரிக்கப்பட்டதில் மதுரை மாநகர் மாவட்டத்துக்கு மதுரை மேற்கு,மதுரை மையம், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு மதுரை வடக்கு, மதுரை கிழக்கு,  மேலூர் சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்துக்கு திருமங்கலம், சோழவந்தான்(தனி), திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதியும் ஒதுக்கப்பட்டது. அமைச்சர்கள்  மோதலால் தான் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கட்சி அலுவலகத்தில் மக்களவை, இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்காமல் மெயில், பேக்ஸ் வாயிலாக வேட்பாளர்கள் விவரங்களை வெளியிட்டனர்.இந்த பிரச்னை அடங்குவதற்குள் அமைச்சர் செல்லூர் ராஜு மீண்டும் போர்க்கொடி தூக்கினார். நேற்று காலை அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் அதிமுக அம்மா பேரவை செயலாளராக உள்ளார். அவருக்கு இன்னொரு பதவியாக மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அவரது மாவட்டம் 4 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாக  உள்ளது. எனது மாவட்டம் 3 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. இது எந்தவிதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார். உடனடியாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மாவட்ட செயலாளர் பதவியை திரும்ப  பெற வேண்டும் அல்லது அவருக்கு வழங்கப்பட்டுள்ள 4 சட்டப்பேரவை தொகுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இல்லா விட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று பகிரங்கமாக எச்சரித்ததாக  கூறப்படுகிறது. அமைச்சர் செல்லூர் ராஜுவின் மிரட்டலால் முதல்வர் எடப்பாடி அதிர்ந்து போனார். இந்த நிலையில் அமைச்சரின் மிரட்டலுக்கு பயந்து ஒரே நாளில் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளின்  எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ மதுரை மாநகர், மதுரை புறநகர்  கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு  மாவட்டங்கள் மதுரை மாவட்டம், கட்சி அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்டு 17ம் தேதி(நேற்று முன்தினம்) வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. கட்சி நிர்வாக வசதியைக் கருத்தில்  கொண்டு, `மதுரை மாநகர் மாவட்டம், மதுரை புறநகர் மாவட்டம்’’ என செயல்பட்டு வரும் மாவட்ட அமைப்புகள், கட்சி அமைப்பு ரீதியாக `மதுரை மாநகர் மாவட்டம்’, `மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்’, `மதுரை புறநகர்  மேற்கு மாவட்டம்’ என மூன்று மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மாவட்டம் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி, மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி, மதுரை மையம் சட்டமன்றத் தொகுதி, மதுரை மேற்கு  சட்டமன்ற தொகுதிகள் அடங்கும்.மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி, மேலூர் சட்டமன்றத் தொகுதி, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும். மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில்     சோழவந்தான் (தனி)  சட்டமன்றத் தொகுதி, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி, உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும்.

இதன் அடிப்படையில் மதுரை மாநகர் மாவட்டம் மாவட்ட செயலாளராக செல்லூர் கே.ராஜு(கூட்டுறவுத் துறை  அமைச்சர்), மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மாவட்டச் செயலாளராக ஆர்.பி. உதயகுமார்( அதிமுக அம்மா பேரவைச் செயலாளர்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். கட்சி அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கட்சியினரும் மாவட்ட  செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கான  நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Selvaraj Raju ,encounter ,Uthayakumar ,Madanai ,Rajan Chepaappa , Rajan Chepaappa,Madurai, Ministers Seloor Raju ,Udayakumar
× RELATED இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்...