×

சென்னையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக பின்பற்ற உத்தரவு

* பாதுகாப்புக்கு ஒரு லட்சம் போலீஸ் * தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல்  அதிகாரி நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தலைமை  தேர்தல் அதிகாரி கூறினார்.தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலை பிரச்னை  இல்லாமல் சுமுகமாக நடத்தி முடிப்பது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட தேர்தல்  அதிகாரிகள் (மாவட்ட கலெக்டர்கள்) மற்றும் அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் நடந்தது.

இதில், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட சென்னையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடந்தது.கூட்டம் முடிந்ததும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் எந்தவித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடாமல், ஆணையம் அளித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் கட்சி பாகுபாடின்றி கடுமையாக கடைபிடிக்க தலைமை  தேர்தல் அதிகாரி, கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதால், தேர்தல் செலவின பார்வையாளர்கள் இன்று தமிழகம் வருவார்கள். தொகுதிக்கு ஒரு தேர்தல் செலவின பார்வையாளர் இடம்பெறுவார்கள். வேட்புமனு தாக்கல் முடிந்ததும் 26ம்  தேதிக்கு பிறகு தேர்தல் பொது பார்வையாளர்கள் வருவார்கள். தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக தமிழகத்தில் 67 ஆயிரம் போலீசார் மற்றும் 34,000 போலீஸ் அல்லாத  பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்படுவார்கள்.

வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ம் தேதி பெரிய வியாழன் என்றும், பிரார்த்தனை நேரம் பாதிக்கப்படும் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் நேற்று நடந்த மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்  மற்றும் பள்ளிகளில் நடைபெறும் பிரார்த்தனையில் எந்த தடையும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளோம். விசாரணை கைதிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். தேர்தல் வாக்குப்பதிவுக்கு 48  மணி நேரத்துக்கு முன் டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் செலவின பார்வையாளர்கள் கேட்டுக்கொண்டால் கூடுதல் பறக்கும் படை அமைக்கப்படும். மொத்தத்தில், தமிழகத்தில் தேர்தலை மிகவும்  பாதுகாப்பாகவும், அதே நேரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மிகவும் கடுமையாக பின்பற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், மாவட்ட எஸ்பிக்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,district collectors ,police officers , All District ,Collectors , Police Officers ,order
× RELATED தமிழகத்தில் மணல் குவாரி வழக்கின்...