×

சபரிமலையில் இருமுடி கட்டு இல்லாமல் 18ம் படியேற முயன்ற பக்தர்கள்: போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் இருமுடி கட்டு இல்லாமல் 18ம் படியேற முயன்ற 2 பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடந்து  வருகிறது. வரும் 21ம் தேதி ஆறாட்டு நிகழ்ச்சியுடன் 10 நாள் திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவையொட்டி தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்தர்கள் குவிந்து வருகின்றனர்.  நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சபரிமலையில் 18ம் படியில் ஏற வேண்டும் என்றால் பக்தர்களிடம் கண்டிப்பாக இருமுடி கட்டு இருக்க வேண்டும். இருமுடி கட்டு  இல்லாமல் எந்த பக்தரும் 18ம் படியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால் இருமுடிகட்டு இல்லாமலும் பக்தர்கள் சபரிமலையில் தரிசனத்துக்கு வருகின்றனர்.

இதுபோன்ற பக்தர்கள் வடக்கு நடை வழியாக மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்.எனவே பக்தர்கள் 18ம் படியேறுவதை கண்காணிக்கவும், அவர்களுக்கு உதவுவதற்காகவும் படியில் போலீசார் நிறுத்துப்படுவது உண்டு. இந்த நிலையில் நேற்று மதியம் 18ம் படியில் நின்ற போலீசார் திடீரென அங்கிருந்து வேறு இடத்துக்கு சென்றுவிட்டனர். இந்த நேரத்தில் ஆந்திர மாநிலத்ைத சேர்ந்த 2 பக்தர்கள் இரு முடிகட்டு இல்லாமல் வந்து 18ம்  படியேறினர்.இது தொடர்பாக அங்கிருந்த பக்தர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கொடிமரம் அருகே பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அந்த 2 பக்தர்களையும் தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு இருவரையும் கீழே இறக்கினர். இந்த சம்பவத்தால் சபரிமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து உயர்நீதிமன்ற குழுவிடம் புகார் செய்யப்போவதாக சபரிமலை ஆச்சார பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.  போலீசாரின் அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் 2 பெண்கள்: சபரிமலைக்கு இளம் பெண்கள் வந்தால் தடுப்போம் என்று கர்மசமிதி அமைப்பு எச்சரித்துள்ளது. இதையடுத்து இளம் ெபண்கள் வருகையை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த 2  தினங்களுக்கு முன்பு ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த 4 இளம் பெண்கள் தரிசனத் துக்காக வந்தனர். இவர்களை கர்மசமிதி அமைப்பினர் பிடித்து திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று ஆந்திராவை சேர்ந்த மேலும் 2  இளம் பெண்கள் தரிசனத்துக்காக வந்தனர். அவர்கள் ஆன்மீக சுற்றுலாவாக குழுவாக வந்திருந்தனர். இவர்களுக்கு சபரிமலை கோயில் ஆச்சாரம் குறித்து எதுவும் தெரியாது. மரக்கூட்டத்தில் வைத்து 2 இளம் பெண்களை பார்த்த  கர்மசமிதி தொண்டர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி சபரிமலை கோயில் ஆச்சாரம் குறித்து கூறினர். இதையடுத்து 2 பெண்களும் திரும்பி சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pilgrims ,Sabarimala , Sabarimala, dual, 18th, pilgrims and police
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு