×

பனை மரங்கள் வெட்டி அழிப்பு : நிலத்தடி நீர் பாதாளத்திற்கு போகும் அபாயம்

இளையான்குடி: சாலைகிராமம் பகுதியில் பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுவதால், நிலத்தடி நீர் பாதாளத்திற்கு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பனை மரங்களை காக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இளையான்குடி தாலுகா சாலைக்கிராமம் பகுதி முற்றிலும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். விவசாய மக்களின் ஒரு அங்கமாக மரங்கள் வளர்ப்பு முக்கியமானதாக உள்ளது. விவசாய நிலங்களில் வரப்பைச் சுற்றிலும் பனை மரங்களை வளர்த்து வந்தனர்.

மேலும் கிணறு அமைந்த இடங்களில் தவிர்க்க முடியாத மரமாக இந்த பனை மரங்கள் இருந்து வந்தது. பனை மரங்கள் வளர்ந்த இடங்களில் நிலத்தடிநீர் ஊற்று அதிகமாகவும், வற்றாத நீரையும் கொடுத்துள்ளது பல ஆய்வுகள் மூலம் நமக்கு தெரிய வந்த உண்மை. ஆனால் சமீப காலமாக இந்த பனை மரங்களை சிலர் செங்கல் கால்வாய்களுக்கு எரிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். அதற்காக பனை மரங்கள் அனைத்தையும் வெட்டி அழித்து வருகின்றனர். நம் முன்னோர்கள் காத்து, வளர்த்த இந்த பனை மரங்களை சொற்ப விலைக்கு, விற்பதால் சுலபமாக அழித்து வருகின்றனர்.

பனை மரங்களின் தன்னிகரில்லா பயன்பாடு தெரிந்ததாலே தமிழக அரசு தமிழ்நாடு அரசின் மரமாக அங்கீகரிக்கப்பட்டு பெருமைபடுத்தி உள்ளது. ஆனால் அதனை சீர்கெடுக்கும் விதமாக வெட்டி அழித்து வருவதும், தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்ப்பதும் இன்றுவரை தொடந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலைக்கிராமம், சமுத்திரம் சாத்தனூர், துகவூர், அய்யம்பட்டி, கட்டனூர், பரதத்யவயல், முத்தூர் ஆகிய பகுதிகள் உட்பட சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 80 சதவீத பனைமரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுளள்ன.

இனியும் பனை மரங்களை வெட்ட அனுமதித்தால், இனிவரும் தலைமுறையினருக்கு பனை மரங்களை வெறும் பாடப்புத்தகத்திலும், ஓவியம் மூலமாகவும் மட்டுமே காண்பிக்க முடியும் நிலை உள்ளது. மாவட்டம் முழுவதும் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து,  வருவாய்த்துறை மூலம் கண்காணிக்க வேண்டும். இடையூறு, மற்றும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் உரிய அனுமதி பெற்று பனை மரங்களை அகற்ற கலெக்டர் விதிமுறைகளை உருவாக்கிட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ilayaankudi, palm trees, underground water
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...