×

மக்களவை தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கள்ளக்குறிச்சியில் எஸ்.கே.சுதீஷ் போட்டி

சென்னை: லோக்சபா தேர்தலில் தேமுதிக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்றே இடைத்தேர்தலும் நடக்கிறது. இந்த நிலையில், மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் தேமுதிக ஒப்புக்கொண்டுள்ளது. இதையடுத்து, இதற்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரச்சார பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கின.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக கட்சி நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 7 தொகுதிகளில் 5 தொகுதிக்கு பாமக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதேபோல், அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படாமல் இருந்த வந்தது. இந்த நிலையில், இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த ஆலோசனை, தேமுதிக அலுவலகத்திலும், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திலும் இன்று நடைபெற்றது. இதையடுத்து, வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. செய்திக்குறிப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த வேட்பாளர் பட்டியலில்...

* கள்ளக்குறிச்சியில் எஸ்.கே.சுதீஷ்,
* வடசென்னையில் அழகாபுரம் மோகன்ராஜ்,
* திருச்சியில் டாக்டர் இளங்கோவன்,
* விருதுநகரில் அழகர்சாமி

ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DM Candidates ,Lok Sabha ,elections , Lok Sabha Election, DMDK, Candidate List, Vijayakanth
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...