×

சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்...

டேராடூன்: அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியாகும். ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான், முதல்  இன்னிங்சில் 314 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஷஷாத் 40, ரகமத் ஷா 98, ஹஸ்மதுல்லா 61, கேப்டன் அஸ்கர் ஆப்கன் 67 ரன் விளாசினர்.

இதைத் தொடர்ந்து, 142 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய அயர்லாந்து அணி நேற்று 288 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது (93 ஓவர்). பால்பிர்னி அதிகபட்சமாக 82 ரன் விளாசினார். கெவின் ஓ பிரையன் 56, ஜேம்ஸ் மெக்கல்லம் 39, டாக்ரெல் 25, முர்டாக் 27 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரான் டோ 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கன் பந்துவீச்சில் ரஷித் கான் 5, யாமின் 3, சலாம்கெய்ல் 2  விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது முதல் வெற்றியை ஆப்கன் அணி பதிவு செய்துள்ளது. ஆப்கன் அணியில் 2-வது இன்னிங்சில் அதிகபட்சமாக ரகமத் ஷா 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் இஷ்நுல்லா 65 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார். முதல் இன்னிங்சில் 98, 2-வது இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்த ரகமத் ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Afghanistan ,victory ,Test Match , Test cricket, cricket, Ireland, Afghanistan, international Test cricket
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை