×

லால்குடி அடுத்த அன்பில் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

லால்குடி: லால்குடி அடுத்த அன்பில் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 564 காளைகளும், 254 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், இப்போட்டியில் பரிசுகள் வழங்கப்படவில்லை. திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த அன்பில் கிராமத்தில் உள்ள மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 47வது ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. லால்குடி கோட்டாட்சியர் பாலாஜி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில கவுரவ தலைவரும், இலங்கை அமைச்சருமான செந்தில் தொண்டைமான், திருவெறும்பூர் எம்எல்ஏ மகேஷ்பொய்யாமொழி மற்றும் முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் திண்டுக்கல், மதுரை, அரியலூர், பெரம்பலூர், துறையூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, இலங்கை என பல்வேறு பகுதிகளில் இருந்து 564 காளைகள் பங்கேற்றன. காளைகளுக்கு கால்நடைமருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவகுழு பரிசோதனைக்குப்பின் 254 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். போட்டி தொடங்கியது முதலில் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டு தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 9 பேர் காயமடைந்தனர்.

இதில் பலத்த காயமடைந்த பார்வையாளராக வந்த மலையாளபட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் (21), தலையிலும், வயிற்றிலும் பலத்த காயமடைந்த வாளவந்தான்கோட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (27) ஆகியோருக்கு வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இதில் லால்குடி வட்டாட்சியர் சத்தியபால கங்காதரன், டிஎஸ்பி ராஜசேகர், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ₹5 லட்சத்திற்கும் மேல் பரிசுகள் வழங்குவதற்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் விதிகளின்படி பரிசுகள் வழங்க முடியாததால் விழாக்குழுவினரும், காளையின் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் பரிசுகள் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lalgudi ,village , Lalgudi, jallikattu, Bulls
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...