×

ஒரே மாதிரியான கைப்பையால் சிக்கல் : 22 பவுன் நகையை திரும்ப ஒப்படைத்த மூதாட்டி, போலீசார் பாராட்டு

நெல்லை: நெல்லை டவுனில் பஸ்சில் ஒரே மாதிரியான கைப்பையால் 22 பவுன் நகையை இழந்த பெண்ணுக்கு, மறுநாளே மனிதாபிமான நடவடிக்கையால் நகை திரும்ப கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் தோட்டாக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த செல்லையா மனைவி சுந்தரம்மாள் (57). சமீபத்தில் இவர் பெங்களூரில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அப்போது தனக்கு சொந்தமான 22 பவுன் நகைகளை மேலநத்தத்தில் உள்ள உறவினரிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு சென்றார். பெங்களூரில் இருந்து திரும்பியதும் மேலநத்தத்திற்கு சென்று உறவினரிடம் நகைகளை பெற்றுக் கொண்டு ஒரு கைப்பையில் வைத்து டவுனுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து சுத்தமல்லி செல்லும் பஸ்சில் பயணித்துள்ளார்.

அதே பஸ்சில் பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மூக்கையா மனைவி சங்கரவடிவும் (65) சென்றுள்ளார். அவரும் அதே வடிவிலான கைப்பையை வைத்திருந்தார். பேட்டை பஸ் நிறுத்தத்தில் சங்கரவடிவு இறங்கிய போது, கூட்ட நெரிசலில் அவசரமாக சுந்தரம்மாளுக்கு சொந்தமான பையை எடுத்துச் சென்று விட்டார். வீட்டிற்கு சென்று பார்த்த போது பையில் நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது கைப்பையில் வீட்டு சாவி, பலசரக்கு பொருட்கள் இருந்த நிலையில், அதை மாற்றி எடுத்து வந்ததை உணர்ந்தார்.

சங்கரவடிவு உடனடியாக பேட்டை போலீஸ் ஸ்டேஷன் சென்று சம்பவங்களை விளக்கி, மனிதாபிமானத்தோடு நகைகளை ஒப்படைத்தார். ஆனால் போலீசார் அவை கவரிங் நகைகள் என நினைத்து சந்தேகம் அடைந்தனர். நகை மதிப்பீட்டாளர் மூலம் சோதிக்கப்பட்டதில் அவை அனைத்து தங்க நகைகள் என உறுதி செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.7 லட்சம் என தெரிய வந்தது. இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி, சப்.இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மறுநாளே நகையை பறி கொடுத்த சுந்தரம்மாளின் புகார் காரணமாக அவரை டவுன் காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர். அவருக்கு அறிவுரை கூறி கைப்பையில் இருந்த கை செயின், நெக்லஸ் உள்ளிட்ட 22 பவுன் நகைகளையும் ஒப்படைத்தனர். அடுத்தவர் நகைக்கு ஆசைப்படாமல் போலீசில் ஒப்படைத்த சங்கரவடிவை குற்றப்பிரிவு போலீசார் பாராட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : policeman ,Mutta , Handbag, jewelry,grandmother, police
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...