×

மாட்டு சாணத்திற்குள் மறைத்து கேரளாவிற்கு நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்தல் : 1,500 கிலோ பறிமுதல்

உத்தமபாளையம்: கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட டிராக்டரில் மாட்டு சாணத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், கேரளா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள மாவட்டமாக உள்ளது. போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மலைச்சாலை போன்றவை போக்குவரத்திற்கு ஏற்ற மாநில நெடுஞ்சாலையாக உள்ளது. இவை தவிர அரிவாள்தீட்டிப்பாறை, சதுரங்கப்பாறை, சாக்குலூத்துமெட்டு பாறை, ராமக்கல்மெட்டு உள்ளிட்டவை ஒற்றையடி மலைப்பாதையாக உள்ளது. இந்த பகுதிகளில் அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேனி கலெக்டர் பல்லவிபல்தேவ், அரிசி கடத்தலை தடுத்திட தீவிர வாகனச் சோதனையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து சிவில்சப்ளைத்துறை பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவில்சப்ளைத்துறை அதிகாரிகள் நடத்தும் சோதனையில் அடிக்கடி கேரளாவிற்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பால்கேன், அரசு, தனியார் பஸ்கள் போன்றவற்றில் கடத்தப்படுவது பிடிபடுகிறது. எனவே, எல்லையோரங்களைக் கண்காணிக்கும் பணியில் இரவு, பகலாக அதிகாரிகள் ஈடுபட்டு வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனர். கடத்தல்காரர்கள் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுத்திட பல யுக்திகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று அதிகாலை சின்னமனூர் பகுதிகளில் இருந்து கேரளாவில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு செல்வதற்காக டிராக்டர் ஒன்றில் உரத்திற்காக பயன்படுத்தப்படும் மாட்டுச்சாணம் கம்பம்மெட்டு வழியாக செல்வதாக தகவல் கிடைத்தது. உத்தமபாளையம் சப்கலெக்டர் வைத்திநாதன் பறக்கும் படை சிவில்சப்ளைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு சோதனையை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து துணைதாசில்தார் ஜாகீர்உசேன், வருவாய்ஆய்வாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர், கம்பம்மெட்டில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளாவிற்கு செல்வதற்காக டிராக்டரில் மாட்டுச்சாணம் ஏற்றிகொண்டு டிராக்டர் வந்தது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள்குழுவினர்
சோதனை மேற்கொண்டனர். இதனை ஓட்டிவந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சற்று பயத்துடன் பதில் அளித்தனர். இதனால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். தாங்கள் வேகமாக கேரளாவிற்கு செல்லவேண்டும் என அவசரப்படுத்தினர். இதனால் சந்தேகம் அதிகரித்த நிலையில் அதிகாரிகள் டிராக்டர் டிரெய்லரின் பின்புறம் கதவினை திறந்து மேற்புறமாக ஊசியால் குத்தி பார்த்தனர். அப்போது பிளாஸ்டிக் சாக்குமூடைகள் உள்ளே இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து மாட்டு சாணத்தை விலக்கியபோது சுமார் 34க்கும் மேற்பட்ட மூடைகளில் கட்டிப்போடப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. இவை மொத்தம் 1500 கிலோ இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து டிராக்டரை ஓட்டிவந்த சீலையம்பட்டியை சேர்ந்த சுருளிராஜா (40) மற்றும் பழனிசாமி (41) ஆகிய இரண்டு பேரையும் பிடித்து உத்தமபாளையம் புட்செல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவலை கேள்விப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு உத்தமபாளையம் சப்  கலெக்டர் வைத்திநாதன் வந்தார்.அவர் கூறுகையில், கேரளாவிற்கு நூதனமுறையில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தடுக்க சிறப்பு கண்காணிப்பு நடக்கிறது. எனவே, இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு விலையில்லாமல் தரப்படும் அரிசி சாப்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். அரிசி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rice ,Kerala , Kerala, ration rice, kidnapping
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி: பழ.நெடுமாறன்