×

செங்குன்றத்தில் மேற்கூரை இல்லாத பஸ் நிலையம்: பயணிகள் கடும் அவதி

புழல்: செங்குன்றம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை இல்லாததால் கோடை மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி பஸ் நிலையத்தில் நடக்கும் குற்ற சம்பவங்கள்  குறித்து  அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்பவர்களை போலீசார் அலைக்கழிப்பதாக பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை செங்குன்றத்தில் மாநகர பேருந்து நிலையம் உள்ளது. இங்கு சென்னை பாரிமுனை, கிண்டி, தாம்பரம், வண்டலூர் பூந்தமல்லி, கோயம்பேடு, ஆரணி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் இருந்து நாள்தோறும்  ஏராளமான மாநகர பேருந்துகள் வந்து செல்கின்றன.அது மட்டுமின்றி செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்காக  இங்கிருந்து புறப்படும் மாநகர மற்றும் அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர்.  அந்த வகையில் தினமும்  ஆயிரக்கணக்கான மக்கள் செங்குன்றம் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இங்கு இல்லை.

பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு தேவையான நிழற்குடைகள், இருக்கை வசதி இல்லை.  இதனால் கோடை மற்றும் மழைக்காலங்களில் இங்கு பஸ் ஏறுவதற்கு வரும் மக்கள் கடும்  அவதிப்படுகின்றனர்.  மேலும், இப்பேருந்து நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு, பாலியல் தொல்லை, மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத  செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து பாதிக்கப்படும் பயணிகள் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தாலும், வழக்கு பதிவு செய்ய போலீசார் மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.  

மேலும், இதன் அருகே உள்ள நாரவாரிக்குப்பம் பேரூராட்சியின்  பல்வேறு வாடகை கட்டிடங்களில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரியாததால், அக்கட்டிடங்களை குடிமகன்கள் மது அருந்தும் பாராக பயன்படுத்துகின்றனர். இதுதவிர, செங்குன்றம் பேருந்து நிலைய வளாகத்தில் ஏராளமான  தனியார் வாகனங்கள் நிறுத்துவதால், அங்கு மாநகர பேருந்துகள் சாலையில் நின்று செல்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்குள் பஸ்சுக்காக காத்திருக்கும்  பயணி கடும் பாதிப்படைகின்றனர்.எனவே, இப்பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து  ஆய்வு செய்து, பேருந்து நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்விளக்குகள் அமைப்பது, அப்பகுதியில்  போலீசாரின் தீவிர ரோந்து பணி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bus station ,seaside ,Passengers , cenkunrat, Non-roof, bus station
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...