×

சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் கனரக வாகனங்களால் தொடரும் விபத்துக்கள்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

பல்லாவரம்: சென்னை புறநகரில் உள்ள பைபாஸ் சாலையோரம் விதிமுறைகளை மீறி நிறுத்தி வைக்கப்படும் கனரக வாகனங்களால் தினமும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுத்து நடவடிக்கை எடுக்க  வேண்டிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளோ கண்டும், காணாமல் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தின் தலைநகரமாக திகழும் சென்னைக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமாக வாகனங்கள் வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் வாகனங்கள் போக்குவரத்து  நெரிசலில் சிக்காமல் எளிதில் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்டதே பைபாஸ் எனப்படும் புறவழிச்சாலை.இதன் மூலம் கனரக வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களும், இந்த புறவழிச்சாலை வழியாக எளிதில்,போக்குவரத்து நெரிசல்கள் இன்றி பயணிக்க முடிகிறது. குறிப்பாக தாம்பரம் முதல்  மதுரவாயல் வரையிலான புறவழிச்சாலை மற்றும் வண்டலூர் முதல் மீஞ்சூர் வரையிலான வெளிவட்ட சாலைகள் தற்போது சாலைப் போக்குவரத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்  இந்த சாலையில் சென்று வருகின்றன. இதனால் சென்னை நகரத்தின் உள்ளே வாகனங்கள் செல்வது தவிர்க்கப்படுவதுடன், போக்குவரத்து நெரிசல்களும் வெகுவாக குறைகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புறவழிச்சாலையில் சமீப காலமாக அதிகரித்து வரும் வாகன விபத்துக்களால், இவ்வழியே பயணிக்கவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. காரணம் புறவழிச் சாலை அருகேயுள்ள கடைகளில் பொருள்கள் வாங்குவதற்காக மற்றும் சாப்பிடுவதற்கு என அணிவகுத்து நிற்கும் கனரக வாகனங்களாலேயே அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக கடந்த  4-ம்தேதி வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் திருமுடிவாக்கம் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தில் மோதி நாராயணன்குட்டி (60) என்பவர் உயிரிழந்தார். அதேபோல் கடந்த 9-ம் தேதி தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் கனரக வாகனத்தில் மோதி, ராஜ்குமார்(19) என்ற கல்லூரி மாணவர் உடல் நசுங்கி பலியானார். கடந்த 19-ம் தேதி தாம்பரம்- மதுரவாயல் பைபாஸில் சரக்கு  வாகனத்தில் மோதி, தினேஷ்குமார்(21) மற்றும் அஸ்வின்நாத்(21) என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் அனகாபுத்தூர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தனர். தொடரும் இது போன்ற சாலை விபத்துக்கள் வாகன  ஓட்டிகளிடையே அச்சத்தை உண்டு பண்ணுகின்றன.

சாலை விதிமுறை மீறல்களே இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணம் என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், கனரக வாகன ஓட்டிகள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட  “டிரக் லேபே” எனப்படும் வாகனங்களுக்கான ஓய்வு இடங்களில் தான் வண்டியை நிறுத்த வேண்டும். மாறாக பைபாஸின் நடுவே கண்ட, கண்ட இடங்களில் கனரக வாகனங்களை நிறுத்துவதே விபத்து ஏற்படக் காரணமாக அமைகிறது. விபத்தினை தடுக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோந்துப் பணியை தீவிரப்  படுத்துவதுடன், விபத்து குறித்த எச்சரிக்கை விளம்பரம், மற்றும் விதிமுறைகளை மீறும் ஓட்டுனர்கள் மீது, அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் பெருகி வரும் விபத்தினை தடுக்க முடியும் என்று  ஆதங்கப்பட்டனர்.எனவே இனிமேலாவது சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்னை புறவழிச்சாலையில் பெருகி வரும் விபத்துக்களைத் தடுக்க, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளனர்.    


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Accidents , road , parked, Accidents, heavy vehicles, accusations,
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி