×

திராவிட இயக்க வரலாற்றின் திருப்புமுனை திருவண்ணாமலை தொகுதி

ஆன்மிக புகழ் மிக்க திருவண்ணாமலைக்கும், திராவிட இயக்க வரலாற்றுக்கும் மிக நெருங்கிய உறவும், தொடர்பும் உண்டு. திமுக உதயமாக வித்திட்டது, முதல் நகர சபை தலைவரை, முதல் எம்பியை அக்கட்சிக்கு வழங்கியது, சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மகத்தான வெற்றிக்கனியை தந்தது என திமுகவின் அரசியல் வரலாற்றில் திருவண்ணாமலைக்கு நீங்கா புகழ் உண்டு.

ஆம்..! தந்தை பெரியாருக்கும், இந்திய கவர்னர் ஜெனரலாக பதவிவகித்த ராஜாஜிக்கும் இடையே, கடந்த 14.5.1949 அன்று திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நடந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்தும் வாய்ந்தது. இந்த சந்திப்புக்கு பிறகு நிகழ்ந்த பெரியார்- மணியம்மை திருமணமும், அதன் எதிரொலியாக பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக உதயமானதும் தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனைகள்.

அதுமட்டுமல்ல...! நேரடி வாக்கு அரசியலில் திமுக களம் இறங்கலாம் என 1956ல் திருச்சியில் நடந்த திமுக மாநில மாநாட்டில் அண்ணா முடிவு செய்தார். அதன்படி, 1957ல் நடந்த இந்திய மக்களவையின் 2வது பொதுத்தேர்தலில், முதன்முதலாக திமுக களம் இறங்கியது. அண்ணா தலைமையில் திமுக களம் கண்ட முதல் பொதுத் தேர்தல் இது.

அப்போது, திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில், ஈரோட்டில் ஈ.வெ.கி.சம்பத், திருவண்ணாமலை தொகுதியில் இரா.தருமலிங்கம் ஆகியோர் வெற்றிபெற்றனர். ஆனால், வெற்றிபெற்றதும் ஈ.வெ.கி.சம்பத் அரசியல் களம் மாறினார். எனவே, திமுகவுக்கு முதல் எம்பியை பெற்றுத்தந்து, திராவிட இயக்க வரலாற்றின் பக்கத்தில் இடம் பிடித்த பெருமையை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அடைந்தது.

கடந்த 1957ல் திமுக சார்பில் இந்த தொகுதியில் வென்ற இரா.தருமலிங்கம், அடுத்து நடந்த 1962 தேர்தலிலும் தொடர்ந்து திமுக சார்பில் வென்றார். அதன்பிறகு, ெதாகுதி மறு சீரமைப்பின் காரணமாக. திருவண்ணாமலை தொகுதி திண்டிவனம் தொகுதியுடன் 1967 மற்றும் 1971 தேர்தல்களில் இணையும் நிலை உருவானது.

பின்னர், கடந்த 1977 தேர்தல் முதல் 2004 தேர்தல் வரை வந்தவாசி மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த திருவண்ணாமலை, கடந்த 2009 தேர்தலில்தான் மீண்டும் மக்களவைத் தொகுதி எனும் சிறப்பை அடைந்தது.சுமார் 42 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலை தொகுதியானாலும், திமுகவின் பாரம்பரியம் மட்டும் குறையவில்ைல. 2009 தேர்தலில், இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட  த.வேணுகோபால், 1,48,300 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் காடுவெட்டி குருவை வீழ்த்தினார். அந்த தேர்தலில், மாநில அளவில் அதிகமான வாக்கு வித்தியாசம் வெற்றி இது என்ற சிறப்புக்குரியது.

மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல..! கடந்த 1963ல் நடந்த திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், மிகக்கடுமையான சவாலை எதிர்கொண்டு திமுக இங்கு வெற்றிபெற்று தமிழகத்தை திரும்பிப்பார்க்க வைத்தது. கடந்த 1957 முதல் கடந்த 2016 வரை நடந்த 14 சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களில், திமுகவும் காங்கிரஸ் கட்சியும் மட்டுமே இத்தொகுதியில் மாறிமாறி வெற்றிவாகை சூடியிருக்கிறது.

இந்நிலையில், தற்போது நடக்கும் மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திருவண்ணாமலை தொகுதி திமுகவுக்கே ஒதுக்கியிருப்பது அக்கட்சியினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. எனவே, இந்த தொகுதியில் தேர்தல் களப்பணி இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dravidian , Dravidian, Thiruvannamalai constituency
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...