×

கொடைக்கானல் அருகே மலைக் கிராமத்தில் யானைகள் முகாம்

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே கூம்பூர் வயல் பகுதியில் நுழைந்த 3 யானைகள் வீடு மற்றும் பயிர்களை நாசமாக்கின. தொடர்ந்து யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் வடகவுஞ்சிக்கு முன் உள்ளது கூம்பூர் வயல் பகுதி. இங்கு நேற்று முன்தினம் இரவு 3 யானைகள் புகுந்தன. விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்கள், மரங்களை சேதப்படுத்தின. பின்னர் அருகே உள்ள வீட்டை நொறுக்கின. யானைகள் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இதனால் கிராமமக்கள், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மக்கள் கூறுகையில், ‘‘கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் விலங்குகள் அடிக்கடி படையெடுக்கின்றன. கொடைக்கானலில் சமீபகாலமாக மனிதர்கள் மற்றும் விலங்குகள் இடையே மோதல் அதிகரித்துள்ளது. தற்போது முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளால் சேதப்படுத்தப்படும் வீடுகளுக்கும், விளைபொருட்களுக்கும் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Elephants camp ,mountain village ,Kodaikanal , Kodaikanal, Elephants camp, mountain village
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்