×

காஷ்மீர் தீவிரவாதிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று நிதி திரட்டிய மசூத் அசார்: விசாரணை அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளுக்காக ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் கடந்த 1990ம் ஆண்டுகளில் பல வெளிநாடுகளுக்கு சென்று நிதி திரட்டியது, போலி பாஸ்போர்ட்டில் டெல்லி வந்து காஷ்மீர் வரை பயணம் செய்து ராணுவத்தினரிடம் சிக்கியது உட்பட பல விரிவான விவரங்கள் பாதுகாப்பு படையினரின் விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. காஷ்மீரின் புல்வாமா தாக்குதல், 2001ம் ஆண்டு நடத்தப்பட்ட நாடாளுமன்றம் மீதான தாக்குதல் உட்பட இந்தியாவில் பல தாக்குதல்களுக்கு காரணமான மசூத் அசார் பற்றிய விவரங்கள் பாதுகாப்பு படையினரின் விசாரணையில் அறிக்கையில் உள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மசூத் அசார் கடந்த 1992ம் ஆண்டு அக்டோபர் மாதம் இங்கிலாந்து சென்றுள்ளான். லண்டன் சவுதால் பகுதியில் உள்ள மசூதியின் மதகுரு முப்தி இஸ்மாயில் என்பவர் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். இவரது பூர்வீகம் குஜராத். ஆனால் பாகிஸ்தானின் கராச்சியில்தான் இவர் படித்து வந்துள்ளார். ஒரு மாத காலம் முப்தி இஸ்மாயிலுடன், மசூத் அசார் தங்கியிருந்து பர்மிங்காம், நாட்டிங்ஹாம், பர்லே, ஷீப்பீல்டு, டட்ஸ்பர்ரி மற்றும் லீசெரு–்டர் நகரங்களில் உள்ள மசூதிகளுக்கு சென்று காஷ்மீர் தீவிரவாதிகளுக்காக நிதி திரட்டியுள்ளான். ஆனால் அவனால் பாகிஸ்தான் கரன்சி மதிப்பில் ரூ.15 லட்சம் மட்டுமே திரட்டப்பட்டது. அதன்பின் சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, ஜாம்பியா ஆகிய நாடுகளுக்கும் மசூத் அசார் சென்றான்.

காஷ்மீருக்காக நிதி அளிக்க அரபு நாடுகளில் உள்ள அமைப்புகள் விரும்பவில்லை. தனது 2வது பயணத்தில் அபுதாபி ரூ.3 லட்சமும், சார்ஜாவில் ரூ.3 லட்சமும், சவுதியில் ரூ.2 லட்சமும் மசூத் அசார் திரட்டினான். இந்தியாவில் நுழைவதற்காக போர்த்துகீசிய நாட்டின் போலி பாஸ்போர்ட்டை மசூத் அசார் பெற்றுள்ளான். வங்கதேச தலைநர் தாகாவில் இருந்து டெல்லிக்கு, அந்நாட்டின் பயணிகள் விமானத்தில் கடந்த 1994ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி வந்துள்ளான். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவனது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சரிபார்த்துள்ளனர். அப்போது உங்களது தோற்றம் போர்த்துகீசியர் போல் இல்லையே என குடியுரிமை அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு மசூத் தனது பூர்வீகம் குஜராத் என கூறியுள்ளான். உடனே குடியுரிமை அதிகாரிகள் எந்த தயக்கமும் இல்லாமல் அவனது பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தி அனுப்பிவிட்டனர். டெல்லியில் இருந்து மசூத் அசார், உ.பி சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள தருல்-உலூம் தியோபந்த் முஸ்லிம் பள்ளிக்கு சென்றுவிட்டு 2 நாள் கழித்து மீண்டும் டெல்லி திரும்பினான். அப்போது அவன் கன்னாட்பிளேசில் உள்ள ஜன்பத் ஓட்டலில் தங்கியுள்ளான்.

1994ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி காலை, மடிகுந்த் என்ற இடத்துக்கு மசூத் அசாரை, தீவிரவாதி சஜத் ஆப்கானி அழைத்துச் சென்றான். அங்கு காஷ்மீர் தீவிரவாதிகள் அனைவரும் ஒன்று திரண்டிருந்தனர். அங்கு ஹர்கத்-துல்-முஜாகிதீன் மற்றும் ஹர்கத்-துல்-ஜிகாத் அல்-இஸ்லாமி அமைப்பு ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டது. பின்னர் மசூத் அசார், ஆப்கானி மற்றும் பரூக் என்ற மற்றொரு தீவிரவாதியுடன் ஒரு காரில் புறப்பட்டான். வழியில் கார் பழுதாகி நின்றது. இதனால் அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏறி அனந்த்நாக் நோக்கி பயணம் செய்தனர். அப்போது ராணுவத்தினர் அந்த ஆட்டோவை மறித்து விசாரித்தனர். அப்போது பரூக் தப்பி ஓடிவிட்டான். மசூத் அசாரும், ஆப்கானியும் ராணுவத்தினரிடம் சிக்கி கைதாகினர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் இந்திய சிறையில் இருந்தான் மசூத் அசார்.  இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 1999ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் காந்தகாருக்கு கடத்தப்பட்டபோது, மசூத் அசார் உட்பட 3 தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Masood Azhar ,terrorists ,Kashmir , Kashmir terrorist,Masood Azhar, funds,
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...