×

24 நாடாளுமன்ற, 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: டிடிவி.தினகரன் வெளியிட்டார்

சென்னை: அமமுக சார்பில் 24 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டார்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இந்தநிலையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட உள்ளது. பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த அமமுகவிற்கு பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. எஸ்.டி.பி.ஐ கட்சி மட்டுமே அமமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது. கட்சி ஆரம்பித்து முதல் தேர்தல் என்பதால் கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருந்தபோதிலும் அமமுக உடன் கூட்டணி வைக்க யாரும் முன்வரவில்லை. பேச்சுவார்த்தை நடத்திய ஒரு சில சிறு, சிறு கட்சிகள் கூட அமமுகவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படவில்லை. இதனால், தொடர் இழுபறிக்கு பிறகு எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு மட்டும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயார் செய்வதில் தீவிரம் காட்டி வந்தார்.

இந்தநிலையில் 24 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 9 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்லுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டார். அதன்படி, நாடாளுமன்ற தேர்தலில், திருவள்ளூர் (தனி) - பொன்.ராஜா, தென் சென்னை- இசக்கி சுப்பையா, பெரும்புதூர் - தாம்பரம் நாராயணன், காஞ்சிபுரம் (தனி) - முனுசாமி, விழுப்புரம் (தனி) - வானூர் என்.கணபதி, சேலம் - வீரபாண்டி எஸ்.கே.செல்வம், நாமக்கல்- பி.பி.சாமிநாதன், ஈரோடு - செந்தில் குமார், திருப்பூர்- எஸ்.ஆர்.செல்வம், நீலகிரி - எம்.ராமசாமி, கோவை - என்.ஆர்.அப்பாதுரை, பொள்ளாச்சி - எஸ்.முத்துக்குமார், கரூர் - என்.தங்கவேல், திருச்சி - சாருபாலா தொண்டைமான்,  பெரம்பலூர்- எம்.ராஜசேகரன், சிதம்பரம்- இளவரசன், மயிலாடுதுறை- எஸ்.செந்தமிழன், நாகப்பட்டினம்- டி.செங்கொடி, தஞ்சாவூர் -  பி.முருகேசன், சிவகங்கை- தேர்போகி வி பாண்டி, மதுரை- டேவிட் அண்ணாதுரை,  ராமநாதபுரம்- ஆனந்த், தென்காசி - பொன்னுத்தாய், திருநெல்வேலி- ஞான அருள்  மணி ஆகிய 24 பேர் போட்டியிடுகின்றனர். இதேபோல், 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் முதல்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பூந்தமல்லி - ஏழுமலை, பெரம்பூர் - வெற்றிவேல், திருப்போரூர் - கோதண்டபாணி, குடியாத்தம் (தனி) - ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் - பாலசுப்பிரமணி, அரூர் (தனி) - ஆர்.முருகன், மானாமதுரை (தனி) - எஸ்.மாரியப்பன் கென்னடி, சாத்தூர் - எதிர்கோட்டை சுப்ரமணியன், பரமக்குடி (தனி) - எஸ். முத்தையா ஆகிய 9 பேர்  போட்டியிடுகின்றனர். இவர்கள், அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் ஆவார்கள். தங்கள் தொகுதிகளிலேயே மறுபடியும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளனர். இதேபோல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சிலர் போட்டியிட விருப்பம் தெரிவிக்காததால் அவர்களின் பெயர்பட்டியல் இந்த பட்டியலில் இடம்பெற வில்லை என கூறப்படுகிறது. அடுத்த பட்டியலில் வெளியாகும் போது புதிய வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் நாளையோ அல்லது நாளை மறுநாளோ வெளியிடப்படும் என்று அமமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

யார் இந்த இசக்கி சுப்பையா?


தென் சென்னையில் போட்டியிடும் இசக்கி சுப்பையா பிறந்த ஊர் தென்காசி அருகே ஆயிரப்பேரி. இவர் முன்னாள் அமைச்சர் ஆவார். தென்காசியில் கல்வி  நிலையங்கள், குற்றாலத்தில் ரிசார்ட் நடத்தி வருகிறார். சென்னையிலும்  இவருக்கு வீடுகள் உள்ளன. சென்னையிலும் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். எம்.எல். படித்துள்ளார். இவரது தந்தை இசக்கி தொடக்க காலத்தில் பொதுப்பணித்துறையில் வேலை செய்தார். பின்னர், சென்னையில் ஒப்பந்தம் எடுத்து தொழில் செய்து வந்தார். கடந்த 2010ல் அதிமுகவில் சேர்ந்த இசக்கி சுப்பையாவுக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2011 சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சரானார். பின்னர், குறுகிய காலத்திலேயே அமைச்சர் பதவியை இழந்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் மகளை இசக்கி சுப்பையாவின் மகன் திருமணம் செய்துள்ளார். அதிமுக  இரு அணிகளாக பிளவுபட்ட போது சசிகலா அணியில் இருந்தார். சசிகலா சிறைசென்ற பிறகு டிடிவி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கியதும் அக்கட்சியில்  இணைந்தார். அதன் முன்னணி நிர்வாகியாக இருந்து வருகிறார். தகுதி  நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சில நாட்கள் குற்றாலத்தில் இவருக்கு  சொந்தமான விடுதிகளில் தான் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே  போன்று மதுரை தொகுதியில் போட்டியிடும் டேவிட் அண்ணா துரை முன்னாள்  சபாநாயகர் காளிமுத்துவின் மகன் ஆவார். இவரை, திருப்பரங்குன்றம் வேட்பாளராக  நிறுத்த அமமுக ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அவர் நாடாளுமன்ற  தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituencies ,DV Dinakaran , Parliament, Assembly seat, candidates list, TTV.Dinakaran
× RELATED கட்சி தாவியவர்களை நம்பி களமிறங்கிய பாஜக!