×

நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் அறிவிப்பு: ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டார்; பாமக, தேமுதிக புறக்கணிப்பு

சென்னை: நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி ஒதுக்கீட்டை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நேற்று வெளியிட்டார். இதில், கலந்து கொள்ளாமல் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது. இதைப்போன்று புதிய தமிழகம், தமாகா கட்சிகளும் இதில் கலந்து கொள்ளவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் என்பது குறித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை 10 மணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அப்போது தொகுதிகளை வெளியிட்டு  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் ஏப்ரல் 18 ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக அதன் கூட்டணி கட்சிகளான பாஜ, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் அதிமுக அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் வருமாறு: அதிமுகவிற்கு சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம் (தனி), பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி (தனி), திருநெல்வேலி, நாகப்பட்டினம் (தனி), மயிலாடுதுறை, திருவள்ளூர் (தனி), காஞ்சிபுரம் (தனி), தென் சென்னை ஆகிய 20 தொகுதிகளும், பாமகவிற்கு தர்மபுரி, விழுப்புரம் (தனி), அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகளும், பாஜ சார்பில் கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 5 தொகுதிகளும், தேமுதிகவிற்கு கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர், தமாகாவிற்கு தஞ்சாவூர், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி), புதி நீதி கட்சிக்கு வேலூர், என்ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அறிவிப்பின் போது, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் அமைச்சர்களும் பாஜ தலைவர் தமிழிசை, தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட பாஜவினர் மட்டுமே கலந்து கொண்டனர். தேமுதிக, பாமக சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாத நிலையில், தொகுதி அறிவிப்பு நிகழ்ச்சியை அந்த இரண்டு கட்சிகளும் புறக்கணித்தன. மேலும் புதிய தமிழகம், தமாகா உள்ளிட்ட கட்சிகளும் இதில் கலந்து கொள்ளவில்லை.

இறுதி நேரத்தில் ஆலோசனை
நடத்திய அதிமுக-பாஜ:  தொகுதி ஒதுக்கீடு அறிவிப்புக்கு முன்னர் அதிமுக தலைவர்கள்-பாஜ தலைவர்களுடன் தனி அறையில் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, கூட்டணி கட்சிகள் வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம். இல்லையெனில் 10 மணிக்கு அறிவிப்பை வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், கூட்டணி கட்சிகள் வராததால் தன்னிச்சையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்திலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே கையெழுத்து போட்டனர்.

8 தொகுதியில் திமுக-அதிமுக நேரடி போட்டி
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சேலம், பொள்ளாச்சி, திருவண்ணாமலை, நீலகிரி, நெல்லை, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென்சென்னை உள்ளிட்ட 8 தொகுதிகளில் அதிமுக-திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் திமுக கூட்டணி கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சி வேலூரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. இதன்படி பார்த்தால் உதய சூரியன்-இரட்டை இலை சின்னம் 11 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : alliance block list announcement ,AIADMK ,Coordinator OBS , AIADMK ,OPS, PMK, DMDK,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...