×

மு.க.ஸ்டாலின் உடன் வைகோ, திருமா, பாரிவேந்தர் சந்திப்பு: 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என வைகோ பேட்டி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் நேற்று சந்தித்து  பேசினர்.திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதிமுக சார்பில் ஈரோடு மக்களவை தொகுதிக்கு கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஈரோடு மதிமுக  வேட்பாளர் கணேச மூர்த்தி ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். மு.க.ஸ்டாலினுக்கு கணேச மூர்த்தி சால்வை அணிவித்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து  தெரிவித்தார்.இந்த சந்திப்பிற்கு பிறகு வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க வந்தோம். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 18  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டாலும் மதிமுகவே போட்டியிடுவது போன்ற எண்ணத்தோடு களப்பணி ஆற்றுவோம். மீண்டும் பாஜக ஆட்சி அமையக்கூடாது என்பது தான் வாக்காளர்களின் எண்ணமாக  உள்ளது. மதச்சார்பற்ற தன்மைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே காங்கிரசுடன் கூட்டணி வைத்தோம்.  

எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.திமுக தலைமையிலான கூட்டணியில் 2 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இதில், திருமாவளவன் சிதம்பரத்தில் சுயேட்சை சின்னத்திலும், விழுப்புரத்தில் உதய சூரியன் சின்னத்தில் அக்கட்சி  பொதுச்செயலாளர் ரவிக்குமார் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இதற்கான அறிவிப்பை திருமாவளவன் நேற்று வெளியிட்டார். இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை  திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.பின்னர், திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தில் வைரம், பலாப்பழம் ஆகிய சின்னங்களை கேட்டோம் ஆனால் அது ஒதுக்கப்படவில்லை. தற்போது நான்காவதாக ஒரு பட்டியலை கேட்டுள்ளார்கள். அதையும் அனுப்பியுள்ளோம். ஏன் காலம்  தாழ்த்துகிறார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை எழுப்புகிறது. இருந்தாலும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட காத்திருக்கிறோம்.

சூரியனும் ஒரு நட்சத்திரம் தான். ஏற்கனவே நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். எங்கள் கூட்டணியின் வெற்றி சின்னம் உதய சூரியன். 3 தோழமை கட்சிகளும் உதய சூரியன் சின்னத்தில்  போட்டியிடுகின்றன. வெற்றிதான் முக்கியம். விழுப்புரம் தொகுதி சூழலை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். சிதம்பரத்தில் 5வது முறையாக போட்டியிடுகிறேன். அது எனக்கு பரிச்சயமான தொகுதி.எனவே, நான் தனிச்சினத்தில் போட்டியிடுவதால் சின்னத்தை கொண்டுபோய் சேர்ப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. திமுக ஒப்புதலோடு கலந்தாய்வு செய்து இந்த முடிவை எடுத்துள்ளோம். வன்னியர் சமூகத்தோடு நாங்கள்  நட்போடு தான் இருக்கிறோம். சமூக பதற்றம் ஒருபோதும் எங்களால் ஏற்படாது. ஒற்றுமையாகவே தேர்தலை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயகக்கட்சியின் சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirum ,Vaiko ,Parvinder Nagar ,MK Stalin: Interview ,constituencies ,alliance ,DMK , Vaiko , MK Stalin,, Thirumavu, Barivantar ,Sun
× RELATED வைகோவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: துரை வைகோ