×

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்றுச்சுவர் இடிப்பு: தமிழக அரசுக்கு வைகோ கடும் கண்டனம்

சென்னை: திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:திருச்சி புத்தூரில், தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் நேரடி கவனம் செலுத்தி அந்த வட்டார மக்களுக்கு கல்வி வாய்ப்புக்களை வழங்கும் சீர்மிகு நிறுவனமாக பெரியார் கல்வி வளாகம் திகழ்ந்துகொண்டு  இருக்கின்றது.சிறப்பு மிக்க அந்தக் கல்வி வளாகத்தின் சுற்றுச் சுவர் அன்னை மணியம்மையார் நினைவு நாளான நேற்று நெடுஞ்சாலைத் துறையினரால் அராஜகமாக இடிக்கப்பட்ட செய்தியையும், அதிகாரிகளின் பொறுப்பற்ற கடிதத்தையும்,  இடித்துத் தூள் தூளாக்கப்பட்ட சுற்றுச் சுவரின் படத்தையும் கண்டு மனம் பதைத்துப்போனேன்.

 மத்திய பாஜ ஆட்சியின் கண் அசைவில் இயங்கிக்கொண்டு இருக்கின்ற தமிழக அதிமுக அரசின் சட்டவிரோதமான இந்த நடவடிக்கையை மதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு, தந்தை  பெரியார் பெயரில் இயங்கி வருகிற கல்வி நிறுவனத்தின் இடிக்கப்பட்ட சுற்றுச் சுவரை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக கட்டித் தர வேண்டும். சட்ட விரோதமாகவும், தான்தோன்றித்தனமாகவும், பொறுப்பற்ற  வகையிலும் இடித்துத் தள்ளிய அதிமுக அரசின் அதிகாரிகளையும், அவர்களின் பின்னே உள்ள சூதுமதியாளர்களையும் மதிமுக மீண்டும் வன்மையாகக் கண்டிக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vaiko ,Government of Tamil Nadu , Periyar ,Century Educational, Vaiko
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...