×

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா 2 நாட்களுக்கு திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரிகளுக்கு தடை

சத்தியமங்கலம் : சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா 18, 19 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் தீப்பிடிக்காத தகர சீட்டு பந்தல் அமைக்கும் பணிகள், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் மார்ச் 18, 19 ஆகிய இரு நாட்கள் இரண்டு நாட்களுக்கு திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் சரக்கு லாரிகள் பண்ணாரி வழியாக செல்ல அனுமதி இல்லை என ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. எனவே இரண்டு நாட்களுக்கு இவ்வழியாக செல்லும் லாரிகள் மாற்று சாலையில் கர்நாடக மாநிலத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குண்டம் இறங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு வசதியாக 20 கிலோமீட்டர் நீளத்திற்கு இரும்புகளால் ஆன தடுப்புகள் கட்டப்பட்டு, தகர சீட்டுகளால் ஆன பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். இதற்காக பக்தர்கள் 3 நாட்களுக்கு முன்பே குண்டம் இறங்குவதற்காக தடுப்புகளில் இடம் பிடித்து காத்திருப்பது வழக்கம். தற்போது 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் இடம் பிடித்து காத்துள்ளனர். கோயில் வளாகத்தில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு, குடிநீர் வழங்கி வருகின்றனர்.

காவல்துறை சார்பில் கூடுதலாக 20 சிசிடிவி கேமரா பொருத்தம்

பண்ணாரி குண்டம் திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கூடுதலாக 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கோயில் வளாகம் முழுவதும் 60 சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில் கோயில் வளாகத்திற்கு வெளியே மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் 20 கேமராக்கள் பொருத்தப்படுவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு எஸ்பி சக்திகணேசன் தலைமையில் ஏடிஎஸ்பி சந்தானபாண்டியன், சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா ஆகியோர் மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pannari Amman Kundam ,festival ,mountain range ,Thimpu , Pannari Amman Temple ,satyamangalam,Timpam ,lorry
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...