×

கொளுத்தும் வெயிலால் கருகும் சூரியகாந்தி பயிர்கள்

விருதுநகர் : கொளுத்தும் வெயிலால் சூரியாகாந்திப் பயிர்கள் கருகி வரும் நிலையில், சாகுபடி செய்த விவசாயிகள், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  விருதுநகர் மாவட்டத்தின் சராசரி மழையளவு 820.10 மி.மீ. ஆனால், கடந்தாண்டு சராசரியைக் காட்டிலும் 25.49 மி.மீ குறைந்து 794.61 மி.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட பல காரணங்களால் கடந்தாண்டில் மக்காச்சோளம், வெங்காயம், உளுந்து என சுமார் 80 ஆயிரம் ஏக்கர் சாகுபடி  பாதிக்கப்பட்டது. நடப்பாண்டில் ஜன.முதல் மார்ச் வரையிலான சராசரி மழை அளவான 71.6 மி.மீ.,ல் ஒரு மி.மீ கூட இதுவரை மழை பதிவாகவில்லை.

இந்நிலையில், மாவட்டத்தில் நடப்பு இறவை பருவத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக சூரியகாந்தி பயிரிட்டுள்ளனர். மழையில்லாமல், அனலாய் கொளுத்தும் வெயிலில் பயிர்கள் அனைத்தும் கருகுகின்றன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கண்மாய், குளம் வறண்டு கிடக்கும் நிலையில், விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துவிட்டது. நிலத்தடிநீர் மட்டமும் மாவட்டத்தில் 300 முதல் 600 அடிக்கு மேல் அதளபாதாளத்திற்கு சென்று விட்டது.
எனவே, கிணறுகள் மற்றும் நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த குளம், கண்மாய்களில் நீரை சேமிக்கும் வகையில் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sunflower ,virdhunagar,summer ,crops
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதியில்...