×

பதற வைக்கும் பொள்ளாச்சி பயங்கரம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகிறதா தமிழகம்?

பொள்ளாச்சி... கோவை மாவட்டத்தின் ‘குளுகுளு’ ஊர். தமிழகத்தில் தென்னை விவசாயம் அதிகம் நடப்பது இங்குதான். ‘பொள்ளாச்சி இளநீர் சாப்டிருக்கீரா... செம டேஸ்டா இருக்கும்’ என்று கூட சிலர் கேட்பதுண்டு. அது மட்டுமல்ல... ‘மினி கோடம்பாக்கம்’ என்றும் கூறுவார்கள். சூப்பர் ஸ்டார் முதல் நேற்று வந்த ஸ்டார் நடித்த படம் வரை இங்கு நிறைய சினிமா ஷூட்டிங் நடந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அப்படி ஒரு ஊரில் நடந்த ‘பாலியல் திரைமறைவு ஷூட்டிங்’ சம்பவம் இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும், பெண்களையும் உலுக்கி எடுத்து வருகிறது. 250க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறது ஒரு கயவர் கூட்டம். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் ஏன் ஒரு பெண் டாக்டர் கூட இந்த கூட்டத்தில் சிக்கி தவித்ததை கேள்விப்படும்போது ஈரக்குலையே நடுங்குகிறது. இனி இதை தடுப்பதற்கான வழி என்ன என்று பார்ப்போம்...!

உலகில் ஆண்டுதோறும் 15 கோடி பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதில் 50 சதவீதம் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கழுகுகளிடமிருந்து குஞ்சுகளை பாதுகாக்கும் கோழியை போல, காமக்கொடூரர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டிய அவல நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என காவல்துறை சொல்லி வரும் நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோ நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள், பல்வேறு கட்சியினர், சமூக அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

‘அண்ணா... விட்டுருங்கண்ணா...’

சமூக வலைத்தளங்களில் வெளியான பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வீடியோவில் ஒரு இளம்பெண்ணை மிரட்டி ஆபாச வீடியோ எடுக்கும் காட்சி குலைநடுங்க வைக்கிறது. அந்த பெண், ‘‘அண்ணா... பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா’’ என்று கதறுவதும், ‘‘உன்னை பிரண்டுன்னு நம்பித்தானே வந்தேன்...’’ என கதறுவது போன்ற வார்த்தைகள், கல் சிலையையும் கண்ணீர் வடிக்க வைத்து விடும். பொள்ளாச்சி மட்டுமல்ல... தமிழகத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மார்ச் 8ம் தேதி மகளிர் தின விழா கொண்டாடிய நிலையில், பொள்ளாச்சி வீடியோ வெளியாகி இருப்பது பெரும் வேதனை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆளுங்கட்சி பிரமுகர் மற்றும் முக்கிய புள்ளி ஒருவரின் குடும்பத்தினர் கூட சிக்கியிருப்பது பல அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

எப்போது முற்றுப்புள்ளி...?

பொள்ளாச்சி சம்பவத்திற்கு முன்னதாக, கடந்த சில ஆண்டுகளில் சென்னை மவுலிவாக்கம் மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே 10 வயது சிறுமி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே 16 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

திருத்தணி அருகே பள்ளிக்கு சென்று மாயமான மாணவி, காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் 17 வயது சிறுமியை பலாத்காரம் மற்றும் நாகை மாவட்டத்தில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை. மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சின்னக்கட்டளை பகுதியில் 17 வயது சிறுமி பலாத்காரம் இப்படி தினமும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி பெற்றோரை மிரள வைத்துள்ளது.

கல்விச்சாலையிலும்...


தெருவில் விளையாடிய சிறுமி, இரவில் தனியாக செல்லும் இளம்பெண்களை கடத்தி பலாத்காரம், காதலிப்பதாக நடித்து பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவது ஒருபக்கம் கவலை அளித்தாலும், பள்ளிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் அதிகரித்து வருகின்றனர். தமிழகத்தில் சிறுமிகள், மாணவிகள், பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். பெண்கள் மீது அதிகரிக்கும் வன்கொடுமைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

வலைத்தளங்களில் ‘வலை’


பொள்ளாச்சி சம்பவம் போன்றே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, மாணவிகள், இளம்பெண்களின் பேஸ்புக் கணக்குகளை ஒரு நெட்வொர்க் கண்காணித்து வருகிறது. இந்த நெட்வொர்க், பணத்தாசை காட்டி படித்து வேலையின்றி தெரியும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, அவர்களை ரோமியோக்களாக மாற்றுகின்றனர். இந்த ரோமியோக்கள் சமூக வலைத்தளங்களில் உள்ள இளம்பெண்களுக்கு காதல் வலை விரிக்கின்றனர். ஆரம்பத்தில் இளம்பெண்களிடம் நட்பாக பழகும் ரோமியோக்கள். பின்னர் ஆசை வார்த்தை காட்டி பெண்களை காதல் வலையில் சிக்க வைக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து பெண்களை தனியாக வரவழைத்து அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அதை வீடியோவாக எடுத்து அந்த நெட்வொர்க் கும்பலிடம் ரோமியோக்கள் கொடுக்கின்றனர். இதற்காக அதிகளவு பணம் ரோமியோக்களுக்கு கொடுக்கப்படுகிறது. பெண்கள் பெயரிலும் சில ரோமியோக்கள் போலி கணக்குகளை தொடங்கி, பெண்களிடம் பழகி பாலியல் சித்ரவதை செய்வதும் நடக்கிறது. பொள்ளாச்சி சம்பவத்தில் டாக்டர் சிக்கியது கூட அப்படித்தான். ஆனால், இச்சம்பவங்களில் ‘ரோமியோக்கள்’ மட்டுமே சிக்குகின்றனர். முக்கிய குற்றவாளிகள் இதுவரை பாலியல் விவகாரங்களில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

200 பெண்களை கடத்தி....

கடந்த 2015ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்த சாத்தையா, அர்ச்சுனன் ஆகியோர் தனியாக செல்லும் பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள் என 200க்கும் மேற்பட்ட பெண்களை கடத்திச் சென்று காரைக்குடி அருகே ஆவடையபொய்கை முந்திரித்தோப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலனுடன் சென்ற இளம்பெண்ணை போலீஸ் எனக்கூறி கடத்திச் சென்று வன்கொடுமை செய்தபோது, சாத்தையா, அர்ச்சுனன் ஆகியோர் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டனர். இவர்களால் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் பயந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கருக்கலைப்பு கொடூரம்

காதல் வலையில் சிக்கி கர்ப்பமாக்கப்படும் பெண்களில் பலரை, வலுக்கட்டாயப்படுத்தி சில தனியார் மருத்துவமனைகளில் ரகசிய கருக்கலைப்பு செய்ய காதலர்களும் அதிகளவில் உண்டு. இதற்காகவே சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சில மருத்துவமனைகள் உள்ளன. இவர்கள் கர்ப்பம் தரித்து வரும் பெண்களில் அதிக தொகை கேட்டு மிரட்டுவதும் நடப்பதாக புகார்கள் கிளம்பி உள்ளன.

கடும் தண்டனை வேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘‘டிஜிட்டல் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருப்பினும் சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகளவு நடந்து கொண்டு தான் இருக்கிறது. வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களில் ஒரு சிலர் மட்டுமே தைரியமாக வெளியில் வந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். நடந்த சம்பவங்களை சொன்னால் நமது வாழ்க்கை சீரழிந்து விடுமோ என்ற அச்சம் அதிகளவு இருப்பதால் நிறைய விஷயங்கள் வெளியே வருவதில்லை.

இதை பலாத்காரம் செய்யும் கும்பல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. எனவே, பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக காவல் நிலையம் சென்று புகார் அளிக்க வேண்டும். முக்கியமாக, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவர்களை கைது செய்து, அவர்களுக்கு வெளிநாடுகள் போல் கடுமையான தண்டனை வழங்கினால் பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது,’’ என்கிறார்.

மனநல மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘‘தனிமனித ஒழுக்கம் என்பது சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் கொண்டு வர வேண்டிய விஷயம். நிறைய வீடுகளில் பெண் குழந்தைகளை உனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறி அடக்கி வளர்க்கின்றனர். அதே நேரத்தில் ஆண் மகனை கண்டுகொள்வது கிடையாது. ஒவ்வொருவருக்கும் சிறுவயதிலிருந்து சுயகட்டுப்பாட்டை வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் எது என சொல்லி தர வேண்டியது கட்டாயம்,’’ என்கிறார்.


வெளிநாடுகளில் விற்பனை

பொள்ளாச்சி விவகாரத்தில் சிக்கியுள்ள கும்பல், கடந்த 7 ஆண்டுகளாக 250க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோக்களை வெளிநாடுகளுக்கு விற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடியை கெடுக்கும் குடி

குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என பொதுமக்கள் அடிக்கடி போராடி வருகின்றனர். ஆனாலும், பள்ளி, கல்லூரி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகிறது. போதை தலைக்கேறியதும் மாணவிகளை கிண்டல் செய்வது, பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

போலீஸ் அலட்சியம்

பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவிகள் காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தால், பணியில் இருக்கும் காவலர்கள், ‘‘உன் மகள் யாரோடவது ஓடியிருக்கலாம்’’ என தெனாவட்டாக பதிலளிக்கின்றனர். இதனாலே பெரும்பாலான பெற்றோர் காவல் நிலையத்திற்கு செல்வதில்லை. எனவே கிராமப்புற பகுதிகளில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டியது மிகவும் அவசியம்.

ஸ்கேன் சென்டரை ‘ஸ்கேன்’ செய்யணும்

கடந்த 30 ஆண்டுகளில் பெண் சிசுக்கொலைகள் குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சிசுக்கொலை வேறு ஒரு ரூபத்தில் நடக்கிறது. தற்போது நவீன ஸ்கேன் வசதி மூலம் கருவிலே அழிக்கக்கூடிய கொடுமைகள் அரங்கேறி வருவது வேதனையின் உச்சக்கட்டம். எனவே, அரசு தனியார் ஸ்கேன் சென்டர்களை தீவிரமாக கண்காணித்து, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

சிறப்புக்குழு அமையுமா?


கோவை மாவட்டம், பொள்ளாச்சி சம்பவம் போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிக்கி ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கும் வகையில் தமிழக அரசு ஒரு சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. முக்கியமாக, நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,women ,state , Pollachi, Pollachi rape, Tamilnadu, women
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!