×

அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் போதிய சம்பளம் இன்றி திணறும் குமரி கோயில் பணியாளர்கள்

* அனுமதிக்கப்பட்ட பணியிடம் 1041- பணியில் உள்ளவர்கள் 497 பேர்  
* முழுநேர பணியாளர் 15 பேர் மட்டுமே

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்  மொத்தம் 490 கோயில்கள் உள்ளன. இதில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில்,   சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், குமாரகோவில் முருகன் கோயில் உள்பட 56 கோயில்கள் பெரிய கோயில்களாக உள்ளன. இது தவிர சிறிய கோயில்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. வருமானத்தின் அடிப்படையில் கோயில்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில்,   சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்கள் அதிகளவில் வருமானம் வரும் கோயில்கள் ஆகும். எனவே இந்த கோயில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வருமானம்  அதிகமாக உள்ள கோயில்களில் பூஜைகள் மற்றும் பராமரிப்பு  உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள்,  வருமானம் குறைவாக உள்ள கோயில்களில் ஒரு வேளை பூஜைக்கு கூட பணம்  கொடுப்பதில்லை. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட போது பணியாற்றிய 1000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்களில் தற்போது 497 பேர் மட்டும் பணியாற்றி வருகின்றனர். கேரள வழிபாட்டு முறைப்படி முழுநேர பணியாளர்களாக பணிபுரியும் ஊழியர்களுக்கு முதுநிலை கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாறாக இவர்களை சில்லறை செலவினமாக கணக்கிட்டு  நிர்வாகம் உதாசீனப்படுத்தி வருகிறது.

மாவட்டத்தில் பணிபுரியும் கோயில் அலுவலர்களுக்கு 6வது ஊதியக்குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் கோயில் ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக மாதம் 1500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2018 நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 1ம் தேதிகளில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் கோயில் பணியாளர்கள் அழைக்கப்பட்டு குறைகள் குறித்து விசாரிக்கப்பட்டது. அங்கு ஊழியர்கள் மற்றும் ஆணைய அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது வெளியிடப்பட்ட விவரங்கள் குமரி மாவட்ட கோயில் ஊழியர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதில், குமரி மாவட்ட கோயில்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 15 பேர் மட்டும் என்று தெரிவித்துள்ளனர்.   மேலும் உரிய ஊதியம் வழங்கப்படாதது மட்டுமல்லாமல் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.  

உயர் பதவி காலியிடங்களில் அரசு விதிமுறைப்படி தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டு காலியாகவே உள்ளன. மேலும் விருப்பத்திற்கு மாறாக ஊழியர்கள் மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு கடுமையான சிரமம் ஏற்படுகிறது.  அத்தியாவசிய பணிகளுக்கான பணியாளர்கள் இல்லாததால் பல கோயில்களில் விளக்கு ஏற்றுவது கூட இல்லாமல் மூடிக்கிடக்கிறது. காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கோயில் சொத்துக்கள் எளிதாக கொள்ளையடிக்கப் படுகிறது. 2014ம் ஆண்டு அரசு அறிவித்த 154 காலி பணியிடங்களில் பணியாளர்கள் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. தவறான புள்ளி விவரங்கள் கொடுத்து ஊழியர்களின் ஊதியம் மறுக்கப்படுவதோடு கோயில் வருவாயும், அரசு மானியமும் எங்கு செலவிடப்படுகிறது என்பது புரியாத புதிராக
உள்ளது.

7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படுமா?

இது குறித்து குமரி மாவட்ட கோயில் பணியாளர்கள் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் உள்ள மொத்த கோயில்களில் 1041 பணியாளர்கள் பணியிடம் உள்ளது. ஆனால் 497 பேர் மட்டும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் உள்ளனர். அவர்கள் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் ஊதியம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பணியாற்றும் கோயில் பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பள செலவு ரூ.16 லட்சம் ஆகிறது. ஆனால் அறநிலையத்துறையில் இருப்பு தொகை ரூ.23 கோடி உள்ளது. இதில் சம்பளம் வழங்க அரசு வழங்கிய மானியம் ரூ.3 கோடி. அரசு, ஊதியக்குழு நிர்ணயித்துள்ள சம்பளம் வழங்க கூறியுள்ளது. ஆனால் இங்குள்ள அதிகாரிகள் கோயில் பணியாளர்கள் 15 பேர்தான் பணியாற்றுகின்றனர், மற்றவர்கள் தினமும் ஒரு மணி நேரம், 2 மணி நேரம் பணியாற்றிவிட்டு வேறு பணிக்கு செல்கின்றனர் என அறிக்கை கொடுத்துள்ளனர்.

 குமரி மாவட்டத்தில் உள்ள பல கோயில்களில் போதிய பணியாளர்கள் இல்லாததால், ஒருவர் ஒன்றுக்கும் ேமற்பட்ட கோயில்களில் பணிபுரியும் நிலை இருந்து வருகிறது. இதனை மறைத்து, அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளனர். இது தொடர்பாக குமரி மாவட்ட திருக்கோயில்களின் வருவாய் விவரம் உரிய படிவ வடிவமிட்டு உடன் எடுத்துவர சுசீந்திரம் இணை ஆணையர்களுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பிய பிறகும் அவர் அனுப்பாமல் உள்ளார். எனவே சென்னை ஆணையர் அலுவலகம் கோருகின்ற விவரங்களை உடனே அளித்து முதுநிலை திருக்கோயில் பணியாளர்களுக்கு இணையான 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் குமரி மாவட்ட ஆலய ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். அனுமதிக்கப்படாத வருடாந்திர ஊதியம் நிலுவையுடன் உடனடியாக வழங்க வேண்டும். சம்பளமில்லாமல் பணிபுரியும் ஊழியர்களை தகுதிக்கேற்ப காலி பணியிடங்களில் நியமனம் செய்து கோயில்களில் முழுநேர பூஜைகள் நடைபெறவும், கோயில் நிலங்கள் பாதுகாக்கப்படவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temple workers ,Kumari ,charity , charity, Kumari temple, employees, salary
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!