×

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் ஆளும்கட்சி விஐபி மகன்களை காப்பாற்ற நாங்கள் பலிகடா: திருநாவுக்கரசு பரபரப்பு வாக்குமூலம்

கோவை: வீடியோக்களை காண்பித்து பெண்களை மிரட்டி பணம் பறித்து, அதை வட்டிக்கு விட்டு அதிக அளவில் பணம் சம்பாதித்தேன் என திருநாவுக்கரசு  பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பொள்ளாச்சி மாணவிகளை மிரட்டி  பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதல்குற்றவாளியாக பொள்ளாச்சியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர்  மகன் திருநாவுக்கரசு (27) உள்ளார். இவரிடம், நான்கு நாள் காவலில் வைத்து  விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு கோவை சி.ஜே.எம். கோர்ட் நேற்று முன்தினம் மாலை  அனுமதி வழங்கியது. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார், புறநகர் பகுதியில் உள்ள ஒரு இடத்துக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு விடிய விடிய விசாரணை நடத்தினர். இரவு 7 மணிக்கு துவங்கிய  விசாரணை அதிகாலை 5.30 மணி வரை நீடித்தது. இடையில், அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை  மட்டுமே தூங்க அனுமதி அளிக்கப்பட்டது. நள்ளிரவில் மட்டும் போலீசார் 3  முறை இருப்பிடத்தை மாற்றி, விசாரணை நடத்தினர். குறிப்பிட்ட  இடத்தில்தான் விசாரணை நடக்கிறது என பொதுமக்கள் அறிந்தால், அங்கு திரண்டு,  திருநாவுக்கரசுவை தாக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இப்படி செய்தனர். 2வது நாளாக நேற்று அதிகாலை 5.30 மணி முதல் விசாரணையை துவக்கினர். அப்போது திருநாவுக்கரசு சிபிசிஐடி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்  விவரம்: நான், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ  படித்து முடித்தேன். நல்ல ஒரு கம்பெனியில் நிர்வாக பொறுப்பில் பணிக்கு சேர திட்டமிட்டு எனது தந்தை என்னை எம்.பி.ஏ படிக்கவைத்தார்.  ஆனால், சேரக்கூடாத நண்பர்களுடன் சேர்ந்ததால் எனது வாழ்க்கை திசைமாறியது. சபரிராஜன் நட்பு கிடைத்த பிறகு, பாலியல் விவகாரத்தில் எனது  எண்ணம் அலைபாய துவங்கியது. இதற்கு ஏற்றாற்போல், சபரிராஜன் பேஸ்புக் மூலம்  இளம்பெண்களை நண்பராக்கி, அழைத்து வந்தார். பல பெண்களிடம் காமக்களியாட்டம்  நடத்திய வீடியோக்களையும் என்னிடம் காண்பித்தார்.

இதன்பிறகு, எனக்கு  சபல புத்தி அதிகரித்துவிட்டது. சபரிராஜன் போலவே நானும் ருசி பார்க்க  துவங்கிவிட்டேன். கல்லூரி படிப்பை முடித்து வெளியே வந்த நாளில் இருந்து  கடந்த 7 ஆண்டுகளாக இதே வேலையாக அலைந்தோம். இதுவரை சபரிராஜன் மூலம் பல  கல்லூரி மாணவிகளை மடக்கி, அவர்களிடம் உல்லாசம் அனுபவித்துள்ளோம். அதை  வீடியோவும் எடுத்துக்கொண்டோம். இதை அந்த மாணவிகளிடம் காண்பித்து பலமுறை  பணம் பறித்தோம். எங்கள் கையில் பிடி சிக்கிக்கொண்டதால் அவர்களால் நடந்த  சம்பவத்தை வெளியே சொல்ல முடியவில்லை. போலீசில் புகார் கொடுக்கவும்  முடியவில்லை. இதுதவிர, 50க்கும் மேற்பட்ட பெண்களை எங்களது பாலியல்  வலையில் விழ வைத்தோம். இவர்களை, பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீ தொலைவில்  சின்னப்பம்பாளையத்தில் உள்ள எனது பண்ணை வீட்டுக்கு காரில் அழைத்துச்செல்வோம். அங்கு உல்லாசம் அனுபவித்து, வீடியோ எடுத்துக்கொண்டு, பணம் பறிக்க  துவங்கிவிடுவோம். பெண்களை பண்ணை வீட்டுக்கு அழைத்துச்செல்ல காரை பயன்படுத்தினோம். தற்போது, அந்த காரை பொள்ளாச்சி  கிழக்கு போலீசார் பறிமுதல் செய்துவிட்டனர். கடந்த ஏழு ஆண்டுகளாக பல  பெண்கள் மற்றும் மாணவிகளிடம் சிறிது சிறிதாக கோடிக்கணக்கான ரூபாய் பறித்துள்ளோம். இவற்றை, எனது தந்தை கனகராஜ் நடத்தும் பைனான்ஸ்  தொழிலில் முதலீடு செய்து வந்தேன். அவ்வப்போது, பைனான்ஸ் தொழில், நிர்வாக  பொறுப்பையும் கவனித்து வந்தேன். நான், நிர்வாக பொறுப்புக்கு வந்த  பிறகு பைனான்ஸ் தொழில் நல்லபடியாக இயங்குகிறது என, எனது தந்தை பலமுறை  பெருமைப்பட்டுள்ளார். கடைசியாக, எங்களுடன் சுற்றும் சக நண்பனின் தங்கை  ஒருவரை சபரிராஜன் வளைத்துவிட்டான். அவரை பண்ணை வீட்டுக்கு  அழைத்துவந்துவிட்டான். அன்றுதான் எங்களுக்கு சனி பிடித்தது. அந்த பெண்  எங்களிடமிருந்து தப்பிஓடி நடந்த விவரத்தை அவரது அண்ணனிடம் கூறிவிட்டார்.

இதன்தொடர்ச்சியாக  எங்களது பாலியல் விளையாட்டு வெளியே தெரிந்துவிட்டது. இதன்பிறகுதான்,  பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக பிரமுகர் பார் நாகராஜ் உதவியை  நாடினோம். அவர், எங்களது பண்ணை வீட்டுக்கு வந்தார். அங்குள்ள  காட்சிகளை பார்த்தபிறகு, பாலியல் தொழில் நடப்பதை புரிந்துகொண்டார்.  இதையடுத்து, சபரிராஜனை மிரட்டி, எங்களது செல்போனில் இருந்த வீடியோக்களை  எல்லாம் பறிமுதல் செய்துகொண்டார். அதை காண்பித்து, அவர் என்னென்ன செய்தார்  என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், அவருக்கு போதிய அளவில் பணம்  கொடுத்ததால் அவர் எங்களுக்கு உதவி புரிந்தார். காவல்நிலையத்தில் எங்கள்  மீது வழக்கு பதிவுசெய்யவிடாமல் பார்த்துக்கொண்டார். அவருக்கு, பொள்ளாச்சியை சேர்ந்த முக்கிய விஐபி.யின் இரு மகன்கள் உதவி புரிந்தனர். அவர்கள், நாகராஜ் மூலமாக எனக்கு அறிமுகமானார்கள். நாகராஜ்  கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்கள் எங்களுக்கு சப்போர்ட் செய்தனர். இதனால்,  எங்களது லீலைகள் வெளியே தெரிந்த பிறகும் கிட்டத்தட்ட 8 மாத காலம் போலீசில்  சிக்காமல் தப்பித்தோம். கடைசியாக கல்லூரி மாணவி விவகாரம் முற்றிவிட்டதால் `பார் நாகராஜ், அதிமுக விஐபி மகன்கள் என எல்லோரும் ஒதுங்கிக்கொண்டனர். ஆளை  விட்டால் போதுமடா சாமீ... என எங்களை அடியோடு தவிர்த்தனர். இதன்பிறகே,  போலீஸ் பிடி எங்கள் மீது இறுகியது. ஆனாலும், தப்பி  ஓடிவிடும்படி ஒரு போலீஸ் அதிகாரி எனக்கு ஐடியா கொடுத்தார். எனது கூட்டாளிகள் 3  பேர் சிக்கிக்கொண்ட நிலையில், நான் மட்டும் வெளியூர் தப்பினேன். இந்த  விவகாரம் விஸ்வரூபம் எடுக்க துவங்கியதால் போலீசார் எப்படியும் பிடித்து விடுவார்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். அதன்பிறகு நானாகவே  பொள்ளாச்சி வந்து, போலீசில் சரண் அடைந்தேன். ஆனால், போலீசார் என்னை கைது  செய்ததாக கணக்கு காண்பித்தனர். இவ்வாறு திருநாவுக்கரசு வாக்குமூலம் அளித்துள்ளார். இவரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று 3வது நாளாக விசாரணை நடத்துகின்றனர்.

19ம் தேதி கடையடைப்பு போராட்டம்:   பொள்ளாச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வரும் 19ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பது எங்களது முதல் கோரிக்கை. குறிப்பாக குற்றவாளிகள் எவ்வளவு பெரிய அதிகார மையத்தில் இருந்தாலும் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும். 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ள இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் பாதிப்புக்கு ஆளான பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19ம் தேதி பொள்ளாச்சியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், வணிகர்கள் உள்ளிட்டோரிடம் ஆதரவு கோரி வருகின்றோம். இவ்வாறு மாதர் சங்க நிர்வாகிகள் கூறினர்.

மேலும் 2 பெண்கள் புகார்
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த  அச்சமுமின்றி புகார் கொடுக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் அறிவித்தனர். இதைதொடர்ந்து கடந்த 3 நாளாக கோவை சிபிசிஐடி அலுவலக செல்போன் எண்களை தொடர்பு கொண்டு நூற்றுக்கணக்கான பெண்கள் பேசியுள்ளனர்.  இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறியதாவது: செல்போன் எண் அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை வந்த செல்போன் அழைப்புகளில் பெரும்பாலானோர் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பேசியுள்ளனர். இதில் ஒரு சிலரிடமிருந்து குற்றவாளிகள் பற்றி முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இதில் 2 பெண்களுடைய புகார்கள் மட்டும் வழக்கு பதிவு செய்யக்கூடியதாக உள்ளது. இந்த பெண்களை, நேரில் வந்து அதிகாரிகளை சந்திக்கும்படி கூறியுள்ளோம். இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறினர்.

சிறையில் கைதிகள் தாக்க வாய்ப்பு
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதான 3 பேர் தற்போது கோவை சிறையில் ‘குண்டாஸ் பிரிவில்’ அடைக்கப்பட்டுள்ளனர். 65 கைதிகள் உள்ள இந்த பிரிவில் சபரிராஜன் உள்ளிட்டோரை அடைக்க கூடாது என கைதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை ‘போக்சோ’ பிரிவு குற்றவாளிகளுடன் அடைக்க சொல்லி கைதிகள் சிலர் கோரிக்கை விடுத்தனர். குண்டர் சட்ட கைதிகளை இடம் மாற்ற முடியாது என சிறை நிர்வாகத்தினர் கூறி விட்டனர். பொள்ளாச்சி பாலியல் கைதிகள் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தாமல் இருக்க அந்த பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டில் லேப்டாப் பறிமுதல்
திருநாவுக்கரசின் வீட்டில் அவரின் தாய், பெரியம்மா, பாட்டி ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். வீட்டில் திருநாவுக்கரசின் மருத்துவ ஆவணங்கள், படிப்பு சான்று, குடும்பத்தினர் பயன்படுத்திய செல்போன்கள், சகோதரி குறித்து விசாரணை நடத்தினர். திருநாவுக்கரசின் தந்தை கனகராஜ் சில ஆண்டுகளாக குடும்பத்தினரை பிரிந்து வசிக்கிறார். திருநாவுக்கரசு நடவடிக்கையில் அதிருப்தியடைந்ததால்தான் அவர் வீட்டிற்கு வருவதில்லை என கூறப்படுகிறது. திருநாவுக்கரசின் வீட்டில் 2 செல்போன், லேப்டாப், மருத்துவ ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பண்ணை வீட்டில் சமையல் செய்வதற்கான பாத்திரங்கள் மற்றும் கட்டில், மெத்தை இருந்தது. பலாத்காரத்திற்கு பயன்படுத்திய மெத்தையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிடியில் சிக்கிய 60 மாணவிகள்
பொள்ளாச்சியில் 60 மாணவிகள் திருநாவுக்கரசு கும்பலின் பிடியில் சிக்கி சீரழிந்தது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘காம வேட்டை கும்பல்’ முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில், கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேஸ்புக்கில் நட்பு தேடி மடக்கியுள்ளது. சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு பாதிக்கப்பட்ட மாணவிகள், இளம்பெண்கள் சிலரின் விவரங்களை விசாரணையின் போது திருநாவுக்கரசு கூறியுள்ளார். அவர்களை தேடி சென்று விசாரிக்க போலீசார் முன்வரவில்லை. வீட்டிற்கு சென்று விசாரித்தால் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்து விடும். தகவல் பரவாமல் விசாரிப்பது சிரமம். பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால் சி.பி.சி.ஐ.டி வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

பண்ணை வீட்டில் மீண்டும் சோதனை
பொள்ளாச்சி ஆனைமலையருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு 2வது முறையாக நேற்றுமுன்தினம் சிபிசிஐடி போலீசார் சென்றனர்.  தனி வாகனத்தில் சென்ற போலீசார் ஆங்காங்கே கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பண்ணை வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனைக்கு செல்லும்போது, உடன் திருநாவுக்கரசின் தாயார் லதாவையும் அழைத்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல், பண்ணை வீட்டை சுற்றிலும் சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் அங்குள்ள ஒரு அறையிலிருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. லதாவிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு குறிப்பெடுத்து சென்றனர். திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sexual Harassment ,Balanadai ,Pollachi ,VIP sons ,victims ,Thirunavukkarasu , Pollachi, rape , VIP sons,Thirunavukkarasu
× RELATED சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கைதானவர் மீது குண்டர் சட்டம்