×

மசூதியில் தாக்குதல் நடத்திய ஆஸ்திரேலிய தீவிரவாதி நியூசிலாந்து நீதிமன்றத்தில் ஆஜர்: கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் 2 மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி 49 பேரை கொன்ற ஆஸ்திரேலிய தீவிரவாதி பிரன்டன் டாரன்ட், நியூசிலாந்து நீதிமன்றத்தில்நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கொலை குற்றச்சாட்டு  சுமத்தப்பட்டது. இச்சம்பவத்தையடுத்து ஆயுத சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் உறுதி அளித்துள்ளார். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள அல் நூர் மற்றும் இதன் அருகில் உள்ள லின்வுட் மசூதிகளில் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 49 பேர் பலியாயினர். இவர்கள் துருக்கி, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தோனேஷியா, மலேசியா, இந்தியா, சவுதி, ஜோர்டான், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. காயம் அடைந்த 39 பேர் கிறைஸ்ட்சர்ச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 வயது சிறுவன், 4 வயது சிறுமி ஆகியோர் அபாய நிலையில் உள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரன்டன் டாரன்ட்(28) என்பவரும் அவரது கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய டாரன்ட், தனது தலையில் பொருத்தியிருந்த  கேமரா மூலம் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தனது பேஸ்புக் அக்கவுன்ட்டில் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியரான இவர், வலதுசாரி தீவிரவாதியாக மாறியுள்ளார்.

இவர் நியூசிலாந்தில் கடந்த 2017ம் ஆண்டு ‘ஏ’ பிரிவு துப்பாக்கி லைசன்ஸ் பெற்றுள்ளார். இதன் மூலம் இவர் இரண்டு ஏஆர்-15 ரக தானியங்கி துப்பாக்கி, 2 கைத்துப்பாக்கி, ஒரு லிவர் ஆக்‌ஷன் துப்பாக்கி ஆகியவற்றை  வாங்கி அவற்றில் சில மாற்றங்கள் செய்துள்ளார். இந்த துப்பாக்கிகளைத்தான் இவர் தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளார். மசூதியில் தாக்குதல் நடந்த 36 நிமிடங்களுக்குள், துப்பாக்கிச்சூடு நடத்திய பிரன்டன் டாரன்ட்டை நியூசிலாந்து போலீசார் மற்றும் பொதுமக்கள் பிடித்து விட்டனர். இல்லையென்றால் இன்னும் அதிகபேரை இவன் சுட்டு  கொன்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது கூட்டாளிகள் என சந்தேகப்படும் டேனியல் பர்ரோ(18) மற்றும் ஒருவர் போலீசாரின் பிடியில் உள்ளனர். இவர்களில் பிரன்டன் டாரன்ட் மட்டும் நியூசிலாந்து நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். வெள்ளை நிற கைதி உடையுடன் இவர் காணப்பட்டார். இவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் ஜாமீன்  கேட்கவில்லை. இதன் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இவரது கூட்டாளி டேனியல் ப்ரரோ மீது கொலையை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மற்றொரு நபரின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஆயுத சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் இன்ஜினியர் மாயம்
ஐதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பர்ஹஜ் ஆஷான் என்பவர் நியூசிலாந்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அல் நூர் மசூதியில் நடந்த  தாக்குதலுக்குப்பின் இவரை தொடர்புக் கொள்ள முடியவில்லை என இவரது தாய் பாத்திமா கூறியுள்ளார். இவர்களுக்கு உதவும்படி ஐதராபாத் எம்.பி ஓவைசியும் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த மற்றொரு நபர் அகமது இக்பால் என்பவர் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மொத்தம் 2 இந்தியர்கள் நியூசிலாந்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு  சம்பவத்துக்குப்பின் நியூசிலாந்தில் 7 இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் என 9 பேர் மாயமாகி உள்ளனர் என தகவல் ெவளியாகியுள்ளது. இவர்களை தேடும் பணியில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது.

கேரள இளம் பெண் பலி
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கேரளாவை ேசர்ந்த ஒரு இளம்பெண்ணும் பலியானது தெரிய வந்துள்ளது. திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரை சேர்ந்த அப்துல் நாசர் மனைவி ஆன்சி(24) என்பவர் துப்பாக்கிச்சூட்டில்  பரிதாபமாக இறந்தார். விவசாய பல்கலைக்கழகத்தில் எம்டெக் மாணவியான இவர் கடந்த ஆண்டு தான் நியூசிலாந்து சென்றார். துப்பாக்கிச்சூட்டின்போது இவரது கணவரும் பள்ளிவாசலில் இருந்தார். ஆனால், அவர் மயிரிழையில்  உயிர் தப்பியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australian ,mosque ,court ,New Zealand , Mosque, attacked, Australian ,case:, Murder
× RELATED ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் பூஜை...