×

20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை, 4 மாநில சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் மனு தாக்கல் தொடக்கம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள, 91 மக்களவை தொகுதிகள், 4 மாநில சட்டசபைக்கு முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. ஆந்திராவில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மேற்கண்ட மாநிலங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மத்திய போலீசார் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 10ம் தேதி மக்களவை தேர்தல் தேதி அட்டவணை வெளியிடப்பட்டதில், முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதில், 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கும், 2ம் கட்ட வாக்குபதிவு ஏப்ரல் 18ம் தேதி - 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கும், 3ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி 14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கும், 4ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கும், 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 6ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 12ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கும், 7ம் கட்ட வாக்குப்பதிவு மே 19ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கும் முடிந்து வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 11ம் தேதி 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கு நடக்கிறது. அதில், ஆந்திராவில் 25, அருணாசல்பிரதேசம் 2, அசாம் 5, பீகார் 4, சட்டீஸ்கர் 1, ஜம்மு - காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தரபிரதேசம் 8, உத்தரகாண்ட் 5, மேற்குவங்கம் 2, அந்தமான் நிக்கோபார் 1, லட்சத்தீவு 1 என, 91 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. அதனால், மேற்கண்ட மாநிலங்களின் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (மார்ச் 18) தொடங்குகிறது.

தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், மார்ச் 25ம் தேதி, வேட்பு மனு பரிசீலனை மார்ச் 26ம் தேதி, வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 28ம் தேதி, வாக்குப்பதிவு ஏப்ரல் 11ம் தேதி நடக்கிறது. மேற்கண்ட 20 மாநிலங்களுக்கு நடக்கும் முதற்கட்ட மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல் பிரதேச சட்டசபை தேர்தலுக்கும் சில தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அதன்படி, ஆந்திராவில் 175 தொகுதிகள், ஒடிசாவில் 28 தொகுதிகள், சிக்கிமில் 32 தொகுதிகள், அருணாசல் பிரதேசத்தில் 60 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடக்கிறது.

தேர்தல் அட்டவணையில் உள்ளபடி, மேற்கண்ட மாநிலங்களில் கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. வேட்புமனு தாக்கல் ெசய்ய வருகிற 25ம் தேதி கடைசி நாள் என்பதால், முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. அதுவும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட்டுவிடும் என்பதால், அந்த மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ேமலும், மேற்கண்ட 20 மாநிலங்களுக்கும் பாதுகாப்பு பணிக்கு மத்திய பாதுகாப்பு படை போலீசார் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள ஆந்திராவில், அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைத்த தெலுங்குதேசம் கட்சி, இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. ஆந்திர சட்டப்பேரவைக்கு போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர்கள் 126 பேர் அடங்கிய முதல் பட்டியலை சந்திபாபு நாயுடு நேற்று வெளியிட்டார். அதில் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ், சபாநாயகர் சிவபிரசாத ராவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சந்திபாபு நாயுடுவின் மகன் லோகேஷ், தலைநகர் அமராவதி மண்டலத்தில் உள்ள மங்களகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதேபோல் ஜெகன் மோகன் ரெட்டி தனித்து களம் காண்கிறார். நடிகர் பவன் கல்யாணுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம் என பாஜ எண்ணிய நிலையில், மாயாவதியுடன் பவன் கல்யாண் கூட்டணி அறிவித்துவிட்டார். இந்தக் கூட்டணியில் கம்யூனிஸ்ட் மற்றும் சில உதிரிக் கட்சிகள் சேரவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் ஆந்திராவில் தனித்துக் களம் காண வேண்டிய சூழலில் பாஜ உள்ளது. ஒடிசாவை பொறுத்தவரை, ஆளும் பிஜூ ஜனதா தளம், காங்கிரஸ், பாஜ ஆகிய கட்சிகள் தனித்தே களம் காணுகின்றன.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அசோம் கண பரிஷத் (ஏஜிபி), போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎப்), திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி கட்சி (ஐபிஎப்டி), தேசிய மக்கள் கட்சி (என்பிபி), தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆகிய கட்சிகள் பாஜ கூட்டணியில் உள்ளன. வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில், அந்தந்த மாநில கட்சிகளுடன் பாஜ கூட்டணி வைத்து களம் காணுகிறது. காங்கிரஸ் கட்சியும், அந்தந்த மாநில கட்சிகளுடன் கூட்டணிவைத்து பிரசாரம் செய்து வருகிறது.

தமிழகத்தில் 19ல் வேட்புமனு தாக்கல்

நாடு முழுவதும் நடக்கும் ஏழு கட்டத் தேர்தலில், தமிழகத்தில் 2ம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதுவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதற்காக வேட்பு மனுத் தாக்கல்  மார்ச் 19, வேட்பு மனுத் தாக்கல் முடிவு  மார்ச் 26, வேட்பு மனு பரிசீலனை  மார்ச் 27, வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்  மார்ச் 29, வாக்குப்பதிவு  ஏப்ரல் 18, வாக்கு எண்ணிக்கை  மே 23ல் நடக்கிறது. மேலும், மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்பதால், மேற்கண்ட அட்டவணைபடியே தேர்தல் நடைமுறைகள் நடக்கவுள்ளன. இப்போதைக்கு, ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lok Sabha ,constituencies ,states ,state legislatures , Parliamentary Elections 2019, Lok Sabha Election 2019, Nomination, Political Parties, Andhra, Security Services, First Voting
× RELATED 2ம் கட்ட மக்களவை தேர்தல்; 13...