×

சமூக ஆர்வலர் முகிலன் மாயமான விவகாரம்: தென் மாவட்டங்களில் சிபிசிஐடி தீவிர விசாரணை

தூத்துக்குடி: சமூக ஆர்வலர் முகிலன் மாயமான விவகாரம் குறித்து நெல்லை,  தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் முகிலன். சமூக ஆர்வலரான இவர் கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு எதிரான போராட்டம், சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி சென்னையில் இருந்து ஊர் திரும்புவதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலன், அதன் பின்னர் மாயமானார். அவரது செல்போன் திண்டிவனம் அருகேயுள்ள கூடுவாஞ்சேரி - உலக்கூர் பகுதியில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மாயமான சம்பவம் குறித்த வழக்கு போலீசில் இருந்து கடந்த 1ம் தேதி முதல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் தனித்தனி குழுக்களாக ஈரோடு, நாமக்கல், சேலம், மதுரை, சென்னை, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து இந்த மாவட்டங்களில் அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் உடல்களை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்துள்ளனர். மேலும் முகிலனிடம் நெருக்கமாக இருந்த நண்பர்கள் பலரிடமும் குறிப்பாக ஒரு பெண் வக்கீலிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இருப்பினும் முகிலன் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தெளிவாக சிபிசிஐடி போலீசாரால் கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் முகிலனின் படம் அச்சிட்ட துண்டு பிரசுரங்கள், பெரிய நோட்டீஸ்களை அச்சிட்டு சிபிசிஐடி போலீசார் முக்கிய பகுதிகளில் ஒட்டியுள்ளனர். பஸ், ரயில் விமான நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகள் என தென்மாவட்டங்களின் அனைத்து இடங்களிலும் சிபிசிஐடி போலீசார் இந்த நோட்டீஸ்களை ஒட்டி வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் முக்கிய சில நபர்களின் செல்போன் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் விரைவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mughal ,CBCID ,districts ,investigation , Mugilan, CBCID, Investigation
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை