×

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் எதிரொலி; பாதுகாப்புக்கு துப்பாக்கி கேட்டு கலெக்டரிடம் சகோதரிகள் மனு

கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடுமை எதிரொலியால் தங்களது பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க கோரி கோவையை சேர்ந்த சகோதரிகள் கோவை கலெக்டர் ஆபீசில் இன்று மனு கொடுத்தனர். கோவையை சேர்ந்த 20, 14 வயது நிரம்பிய சகோதரிகள் 2 பேர் தங்களது தந்தையுடன் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தித்தாள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக அறிந்து வருகிறோம்.

இக்காலகட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் துப்பாக்கி வழங்கி உதவ வேண்டும், என கூறியிருந்தனர். இது குறித்து அந்த சகோதரிகள் கூறுகையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் நீதி கிடைக்குமா? என தெரியவில்லை. இவ்விவகாரத்தில் முதலில் 1500 வீடியோக்கள் உள்ளதாகவும் 100க்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறினர். ஆனால் தற்போது 4 வீடியோ மட்டும் உள்ளது. சில பெண்கள் மட்டுமே பாதித்ததாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் தெரிந்தவர்களை நாங்கள் பார்க்கும்போது இன்னொரு திருநாவுக்கரசோ அல்லது சபரி ராஜனோ என எண்ண தோன்றுகிறது. எனவே எங்கள் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வழங்குமாறு மனு கொடுத்துள்ளோம் என்றனர். அந்த சகோதரிகளின் தந்தை கூறுகையில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் புகார் அளித்த பெண் பெயர் உள்ளிட்ட விவரங்களை அரசு வெளியிட்டு நம்பிக்கையை சிதைத்து விட்டது. பெண்கள் தைரியமாக புகார் அளிக்கும் வகையில் அரசு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும், என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,sisters ,collector , Pollachi, Sexual Affairs, Sexual Harassment, Gun, Safety, Coimbatore, Collector
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!