×

கிறைஸ்ட்சர்ச் தீவிரவாத தாக்குதல் எதிரொலி நியூசிலாந்து-வங்கதேசம் 3வது டெஸ்ட் போட்டி ரத்து: வீரர்கள் நூலிழையில் தப்பினர்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஹேக்லி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்க இருந்த 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. நியூசிலாந்தில் கடந்த மாத தொடக்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி, முதலில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வந்தன. ஹாமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து, அடுத்து வெலிங்டனில் நடந்த 2வது டெஸ்டிலும் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. நியூசிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில், கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியில் தொழுகை நடத்துவதற்காக வங்கதேச அணி வீரர்கள் நேற்று பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். மசூதியை நெருங்கிய நிலையில், அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதை அறிந்து பேருந்து நிறுத்தப்பட்டது. வீரர்கள் அனைவரும் பேருந்துக்குள்ளேயே குனிந்து உட்கார்ந்தபடி பதற்றத்துடன் காத்திருந்தனர்.

சில நிமிடங்கள் தாமதமாகச் சென்றதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர். இரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 49 பேர் பலியானதும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் நடத்திய அவசர பேச்சுவார்த்தையின் முடிவில், ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற இருந்த 3வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வங்கதேச வீரர்கள் உடனடியாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வங்கதேச அணி மேலாளர் காலித் மசூத் கூறுகையில், ‘இரண்டு அல்லது மூன்று நிமிடம் முன்னதாக வந்திருந்தால், துப்பாக்கிச்சூடு நடக்கும்போது நாங்களும் மசூதிக்குள்ளே இருந்திருப்போம். நாங்கள் உயிர் தப்பியது உண்மையிலேயே அதிர்ஷ்டவசம் தான்’ என்றார். தமிம் இக்பால், முஷ்பிகுர் ரகிம் உட்பட வீரர்கள் பலரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து தகவல் பதிந்து, தாங்கள் நலமுடன் இருப்பதை தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New Zealand ,match ,Bangladesh ,Test match , New Zealand,Bangladesh
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...