×

5 மாதமாக ஊழியம் வழங்காததை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்: அனகாபுத்தூரில் பரபரப்பு

பல்லாவரம்: அனகாபுத்தூர் நகராட்சியில் முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனகாபுத்தூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் சேரும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் சுமார்  164 துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் இவர்களுக்கு  கடந்த ஐந்து மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் பலமுறை நகராட்சி ஆணையாளரை சந்தித்து முறையிட்டும், ஆணையாளர் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று அனகாபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுப் பணியாளர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் 164 பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனகாபுத்தூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்த்து வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யாமல், நகராட்சி நிர்வாகம் பல மணி நேரம் வேலை வாங்குகிறது. பாதுகாப்பு சாதனமான கையுறை, காலுறை, முகக் கவசம் உள்ளிட்ட எதையும் வழங்காமல், அதற்கான பணத்தையும் சேர்த்து  அதிகாரிகள் ஊழல் செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் எங்களுக்கான ஊதியத்தை போராடித்தான் பெறவேண்டிய நிலை உள்ளது. எங்களுக்கான சம்பள பணத்தை அனகாபுத்தூர் நகராட்சி ஆணையர் மல்லிகாராஜேந்திரன், ஒப்பந்ததாரருடன் சேர்ந்து  தனது சொந்த செலவிற்காக பயன்படுத்தி விட்டு, எங்களுக்கு சம்பள பாக்கி வைத்து வருகிறார். எங்களுக்கான சம்பள பணத்தை தராததால், நாங்கள் வாழ வழியின்றி தவித்து வருகிறோம். விரைவில் எங்களது சம்பள பணத்தை தராமல் இழுத்தடித்தால் எங்களது அடுத்தக்கட்ட போராட்டம் தொடரும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : protesters ,demonstration ,Anakaputhur , Ministry, cleaning staff, demonstration
× RELATED கூடுதல் சாம்பார் கேட்டு தாக்குதல்: ஓட்டல் ஊழியர் பலி