×

ஊர்க்காவல் படையினர் அதிரடி : மாதம் முழுவதும் வேலை தராவிட்டால் தேர்தல் பணியை புறக்கணிப்போம்

மதுரை: தமிழகத்தில் போலீசாருக்கு இணையாக ஊர்க்காவல் படையினர் பொதுக்கூட்டம், கோயில் திருவிழா உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டந்தோறும் தலைநகரங்களில் உள்ள அலுவலகங்கள் மூலம் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பு மாதந்தோறும் 25 நாட்கள் வேலை நாள் ஒன்றுக்கு ₹150 ஊதியம் என்று இருந்தது.கடந்த 2017ம் ஆண்டு ஐகோர்ட் உத்தரவின்படி 8 மணிநேரம் ேவலை, பணி நாளில் ₹560 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.  ஆனால் மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருகிறது. வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும். மாதம் முழுவதும் வேலை வழங்க வேண்டும்கோர்ட் உத்தரவுப்படி இரண்டாம் நிலை காவலருக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இவர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இதுகுறித்து ஊர்க்காவல் படையினர் கூறும்போது, ‘‘மதுரை உட்பட மாநிலம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம். மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்கி வருகின்றனர். இதனால் நாங்கள் மற்ற வேலைகளுக்கு செல்ல முடியவில்லை. மாதத்தில் எந்த நேரத்தில் வேலைக்கு அழைப்பார்கள் என்று காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளோம். குறைந்த வருமானத்தை வைத்து, குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த வருவாயும் மாதந்தோறும் முழுமையாக கிடைப்பது இல்லை. 3 முதல் 5 மாதத்திற்கு பின் தான் கிடைக்கிறது. வருவாயை மாதந்தோறும் வழங்கவேண்டும். மாதத்தில் எல்லா நாட்களும் வேலை வழங்க வேண்டும். அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commandant Action Force , The police force, the election work, the boycott
× RELATED தென் மேற்கு பருவ மழை தீவிரம்.....