×

சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 7.5 லட்சம் அமெரிக்க டாலரும் சிக்கியது

சென்னை: இலங்கையிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 2.2 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து கடத்த முயன்ற 7.5 லட்சம் அமெரிக்க டாலரும் சிக்கியது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த ரஷித்கான் (28), சுற்றுலா பயணி விசாவில் இலங்கைக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பினார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை மடக்கி நிறுத்தி, உடமைகளை சோதனையிட்டனர்.

ஆனால், அவற்றில் எதுவும் இல்லை. சந்தேகம் தீராததால் அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது, அவரது உள்ளாடைக்குள் புத்தம் புதிய தங்க செயின்கள் மற்றும் தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மொத்த எடை 2.2  கிலோ. இதன் சர்வதேச மதிப்பு 65 லட்சம். இதையடுத்து, ரஷித்கானை கைது செய்து, நகை, தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
அதே விமானத்தில் சென்னையை சேர்ந்த முகமது கார்த்திக் (31) என்பவரும் சுற்றுலா பயணியாக இலங்கைக்கு சென்று விட்டு சென்னை திரும்பினார். அவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனையிட்டனர். அதில் எதுவும் இல்லை. இதனால், தனியறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.

அப்போது, அவரது ஆசனவாயில் ரப்பர் பார்சல் இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது, 160 கிராம் தங்கம் மற்றும் 2 தங்க கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சம். இதையடுத்து, அவரிடம் இருந்த தங்கம், தங்க கட்டிகளை பறிமுதல் செய்து கார்த்திக்கை கைது செய்தனர். இதுபோல், சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த சென்னையை சேர்ந்த ஆஷிப்கான் (38) என்பவரின் உடமைகளை ஸ்கேன் செய்தபோது, சூட்கேசில் உள்ள ரகசிய அறையில் வெளிநாட்டு பணம் இருப்பது தெரிந்தது. அதில் ₹.7.5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்து, ஆஷிப்கானை கைதுசெய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai airport , Chennai airport, 2 kg smuggling, gold
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...