×

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக அடுத்த 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என திமுக தொடர்ந்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் 21 இடங்கள் காலியாக உள்ளன. 18 தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவித்து விட்டு, வழக்கு காரணமாக  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சியில் தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியிருந்தது.  இதுதொடர்பாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 12ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் மொத்தம் 21 சட்டசபை தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை நடத்தாமல் இருப்பது உள்நோக்கம் கொண்டது’’ என குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதத்தில், “திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த ஏதாவது காரணம் காட்டி தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்கிறது. ஏப்ரல் 18ம் தேதி நடத்தாவிட்டாலும் அடுத்தகட்டத்தின் போதாவது மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் தேர்தலை நடத்தவே ஆணையம் முன்வரவில்லை என்பதுதான் சந்தேகமாக உள்ளது. இந்த தொடர் காலதாமதம் என்பது மேற்கண்ட தொகுதியின் வளர்ச்சியை முற்றிலும் பாதிப்படைய செய்யும்’’ என வாதிட்டார்.

 தற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், “திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் தொடர்பாக வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதனால் தற்போது தேர்தல் நடத்த வாய்ப்பு கிடையாது. அதேபோல் குறுகிய காலம்தான் உள்ளது என்பதால் இடைத்தேர்தல் குறித்து எந்தவித நடவடிக்கைகளையும் ஆணையத்தால் உடனடி ஏற்பாடு செய்ய முடியாது’’ என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், “திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மேலும் தேர்தலை உடனடியாக ஏன் நடத்த வேண்டும் என மனுதாரர் வலியுறுத்துகிறார் என்பது புரியவில்லை.

இருப்பினும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தாமல் காலதாமதம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யவும் முடியாது. மேற்கண்ட மூன்று தொகுதிகள் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு மூன்றாவது நபர் தரப்பில் தவறான அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகிறோம் என தெரிவித்த நீதிபதிகள், மேற்கண்ட 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக அடுத்த 2 வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது’’ என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : elections ,Ottapidaram ,Aravindar ,Election Commission ,Supreme Court , Tiruparankundram, Ottapidaram, Aravindar, Supreme Court, Election Commission
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்