×

அமேதி, ரேபரேலி தொகுதியில் புது சிக்கல்.... உ.பி.யில் உருவெடுத்தான் புதிய ‘ராவண்’

உ.பி.யில் நேற்று காங்கிரஸ் பொ துச்செயலாளரான பிரியங்கா திடீர் என ‘பீம் ஆர்மி’ தலைவரான ராவண் என்கிற சந்திரசேகர் ஆசாத்தை  சந்தித்தார். இதனால், காங்கிரஸ் அம்மாநிலத்தின் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளைக் குறி வைப்பதாகக் கருதப்படுகிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவிய கன்ஷிராம் பிறந்த நாள் இன்று டெல்லியில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்ள, உத்தரபிரதேச மாநில சஹரான்பூரில் இருந்து பீம் ஆர்மியின் நிறுவனர் ராவண் ஊர்வலமாகச் சென்ற போது, அந்த ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதால், ராவண் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மீரட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராவணை, உத்தரப்பிரதேச காங்கிரஸ் மேற்குப் பகுதி பொதுச்செயலாளரான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேரில் வந்து சந்தித்தார். இந்தச் சந்திப்பு உத்தரபிரதேச அரசியலில் அதிக முக்கியத்துவம் பெற்று பேசப்பட்டு வருகிறது. காரணம், மாநிலத்தின் மேற்குப் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே ராவணுக்கு செல்வாக்கு இருப்பதால், அவர் காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்தாண்டு சஹரான்பூரில் அம்பேத்கர் பெயரில் ராவண் ஊர்வலம் நடத்திய போது கலவரம் ஏற்பட்டதால், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தேர்தல் நேரம் என்பதால், அரசியல் கட்சிகள் மத்தியில் ராவண் முக்கியத்துவம் பெற்றுள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதிக்கு அடுத்தபடியாக ராவணுக்கு செல்வாக்கு கூடி வரும் நிலையில், அவர்கள் வாக்குகளை பெற பிரியங்கா திட்டமிட்டுள்ளார். இதையறிந்த மாயாவதி, அகிலேஷ் யாதவுடன் தேர்தல் கூட்டணி பலமாக வைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் நகர்வு பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளார். அதனால், மாநில தலைநகரான லக்னோவில் மாயாவதி, அகிலேஷ் யாதவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில், காங்கிரசின் கோட்டையாக கருதப்படும், ‘அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில், சீக்கிரம் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். 2 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்’ என்று மாயாவதி அழுத்தம் கொடுத்துள்ளார். ஏற்கனவே, ‘சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலி மற்றும் ராகுலின் அமேதி தொகுதியிலும் போட்டியில்லை’ என அகிலேஷ் - மாயாவதி கூட்டணி தெரிவித்தது. தற்போது பிரியங்காவின் அதிரடியால், காங்கிரசின் இரு தொகுதிகளிலும் வேட்பாளர் நிறுத்த இந்த கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amethi ,constituency ,Rae Bareilly ,Rawan , Amethi, new problem, Rae Bareilly constituency, new 'Rawan'
× RELATED கொள்ளு தாத்தா நேரு, தாத்தா, பாட்டி,...