×

கட்சியினர் சீட் பெற ஆர்வம் காட்டாததால் தஞ்சையை தமாகாவுக்கு தள்ளிவிட்ட அதிமுக

தஞ்சை : தஞ்சை தொகுதியில் போட்டியிட கட்சியினர் ஆர்வம் காட்டாததால், அந்த தொகுதியை கூட்டணி கட்சியான தமாகாவுக்கு அதிமுக ஒதுக்கி விட்டதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் சொந்த ஊர் பாபநாசம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில். எனவே பாபநாசம் சட்டமன்ற தொகுதி அடங்கி உள்ள மயிலாடுதுறையை ஒதுக்குமாறு தமாகா கேட்டது. மயிலாடுதுறையில் வாசனே களமிறங்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் தமாகாவுக்கு மயிலாடுதுறையை ஒதுக்காமல், தஞ்சை மக்களவை தொகுதியை அதிமுக ஒதுக்கி விட்டதாக கூறப்படுகிறது. தஞ்சை தொகுதியின் சிட்டிங் அதிமுக எம்பி பரசுராமன். விருப்பமனு அளித்திருந்தாலும், இவர் மீண்டும் எம்பி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. தற்போதுள்ள சூழலில் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். அப்படியே செலவு செய்தாலும், ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத நிலையில் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டி இருக்கும். எனவே ஒதுங்கிக்கொள்வது நல்லது என்று பரசுராமன் நினைப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவரை போலவே கட்சியினர் பலரும் நினைப்பதால், தஞ்சை எம்பி தொகுதியில் போட்டியிட யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக தஞ்சையை தமாகாவுக்கு, அதிமுக தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கேட்ட தொகுதி கிடைக்காததால், தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து வாசன் பின் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. பட்டுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ ரங்கராஜன், இல்லாவிட்டால் இவரது தம்பி நடராஜன் ஆகியோரில் ஒருவரை தஞ்சை தொகுதியில் களமிறக்க வாசன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி தமாகா வட்டாரத்தில் விசாரித்த போது, வாசன் இதுவரை தேர்தலில் போட்டியிடவே இல்லை. இரு முறை ராஜ்யசபா எம்.பியாகி மத்திய அமைச்சராக இருந்து உள்ளார். அவர் கடந்த தேர்தலிலேயே மயிலாடுதுறையில் போட்டியிட விரும்பினார். அப்போதும் சீட் கிடைக்கவில்லை. இப்போதும் மயிலாடுதுறை கிடைக்கவில்லை என்றனர்.

தமாகா தொண்டர்கள் குமுறல்

பாஜ கூட்டணியில் தற்போது தமாகா இணைந்துள்ளது அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் தமாகாவை கூண்டோடு கலைத்துள்ளனர். இது குறித்து மூத்த தமாகா பிரமுகர்கள் கூறியதாவது: பதவிக்காக சமரசம் செய்து கொள்ளாத வாசன், தற்போது பாஜ கூட்டணியில் இணைவது ஆச்சரியமாக உள்ளது. தனிக் கட்சி தொடங்கினாலும் அந்த குடும்பம் என்றுமே காங்கிரஸ் குடும்பம் தான் என்று இருந்த நிலையில் காங்கிரசின் நேர் எதிரியான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து வாசன் தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளார். எது எப்படியோ தமாகா தலைவர் வாசன் குடும்பத்தின் மீது இருந்த காங்கிரஸ் முத்திரை அழிந்து போனதால்  தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Tamana , AIADMK, Thanjavur, Tmc,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...