×

அதிகாரிகள் கொர்ர்ர்.. மயிலாடுதுறையில் தேர்தல் உண்டா, இல்லையா?

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படாததால், தேர்தல் உண்டா, இல்லையா என்ற சந்தேகம் வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க அன்று முதல் தமிழகம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை நடந்து வருகிறது. ஆனால் தேர்தல் நடத்தை விதி அமலாகி 5 நாட்களாகியும் மயிலாடுதுறை தொகுதியில் இதுவரை வாகன தணிக்கை நடைபெறவில்லை. வழக்கமாக தேர்தல் சமயத்தில் மயிலாடுதுறையில் கால்டெக்ஸ் பகுதி, திருவாரூர் சாலை, தரங்கை சாலை, குடந்தை சாலை ஆகிய இடங்களில் வாகன தணிக்கை நடைபெறும். இப்போது இந்த இடங்களில் வாகன சோதனை நடைபெறாததால், மயிலாடுதுறையில் தேர்தல் பரபரப்பே ஏற்படவில்லை.

இதுதவிர மயிலாடுதுறை நகரில் ஆங்காங்கே தனியார் மற்றும் அரசு சுவர்களில் பல்வேறு கட்சிகளின் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்களை அழிக்கவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் உள்ள இரட்டை இலை சின்னம் பல இடங்களில் மறைக்கப்படவில்லை. அதேபோல் அருகில் உள்ள தஞ்சை, நாகை எம்பி தொகுதிகளில் அதிகாரிகள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர். ஆனால் மயிலாடுதுறையில் அனைத்து கட்சி கூட்டமும் இதுவரை நடத்தப்படவில்லை. இதனால் மயிலாடுதுறைக்கு மட்டும் தேர்தல் இல்லையோ என்ற நினைப்பு வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Mayiladuthurai , poll,Mayiladuthurai
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...