×

வியாபாரிகளிடம் பணம் பறிமுதல் எதிரொலி : கருங்கல்பாளையம் சந்தையில் மாடு வரத்து, விற்பனை மந்தம்

ஈரோடு: ஈரோடு மாட்டுச்சந்தைக்கு நேற்று வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வந்தனர். இதனால்,மாடுகள் வரத்தும், விற்பனையும் குறைந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் மாடு விற்க பல்வேறு மாவட்ட விவசாயிகள் வருவார்கள். அதேபோல, மாடுகளை வாங்கி செல்ல தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்வார்கள். தற்போது, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து  தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை கொண்டு வரும்போது உரிய ஆவணம் இல்லாவிட்டால் பணத்தை பறிமுதல் செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று ஈரோடு மாட்டுச்சந்தைக்கு மாடு வாங்க வந்த வியாபாரியிடம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி வாகன சோதனை சாவடியில் சோதனை நடத்தி 5 லட்சத்து 84 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஈரோட்டில் நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து போனது. மாடுகளை வாங்க வரும் வியாபாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் வருவது குறைந்தது.

வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு செல்லும் பணத்தை உரிய ஆவணங்கள் தேவை என்பதால் மாட்டுச்சந்தையில் மாடுகளை விற்பனை செய்தது மூலமாக வந்த பணம் குறித்து கால்நடை சந்தை சார்பில் எவ்வளவு ரூபாய்க்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது என்ற தகவல் அடங்கிய ரசீதுகளை கொடுத்தனர்.  வழக்கமாக இந்த சந்தையில் ரூ.3.50 கோடிக்கு விற்பனை இருக்கும். ஆனால், நேற்று நடந்த சந்தையில் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கே வர்த்தகம் இருந்தது. மேலும், மாடுகள் விற்பனை தொடர்பாக பேரம் பேசப்பட்டு தொகை இறுதி செய்யப்பட்ட பிறகே வியாபாரிகள் ஏடிஎம் மூலமாக பணத்தை எடுத்து விவசாயிகளுக்கு கொடுத்தனர்.

இதுகுறித்து மாட்டுச்சந்தை மேலாளர் முருகன் கூறுகையில் ,`இந்த மாட்டுச்சந்தையில் வழக்கமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். ஆனால், நேற்று நடந்த சந்தைக்கு 350 பசுமாடு, 300 எருமை, 150 வளர்ப்பு கன்றுகள் கொண்டு வரப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் வியாபாரிகள் வருகை குறைந்ததால் விவசாயிகள் அதிகளவில் மாடுகளை கொண்டு வரவில்லை. மாட்டுச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மாடுகளுக்கு உரிய ரசீது கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : traders ,cow dump ,Karangalpalai , Money, Karungalpalayam, cow
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...